124
எங்களமைச்சரவையில் சாதிக் கட்டுப்பாட்டை மீறி கலப்பு மணம் செய்துகொண்டவர்கள் இருக்கிறார்களே என்றெல்லாம் பெரியாரிடம் எடுத்துச் சொல்லி அவரது முறையை மாற்றுவது தான் ராஜதந்திரமாகுமேயொழிய எங்களுக்கு மெஜாரிட்டியிருக்கிறது என்று சொல்லி கட்சி பலத்தைக் கொண்டு சட்டம் போட்டுக்கொள்வதில் வியப்புமில்லை அதில் யூகமுமில்லை. பலமுள்ள ஒரு அரசியல் கட்சி ராஜதந்திர முனையில் வெற்றி பெற்றார்கள் என்று உலகத்திற்கு நீங்கள் அறிவிக்க வேண்டும். ஆகவே பெரியாரை தயவு செய்து சந்தியுங்கள். அவரது மனக் குமுறலை உணர்ந்துகொளளுங்கள். அவரது லட்சியமும் உங்களுக்கு உகந்ததுதான். ஆனால் அவரது முறை தவறென்று நீங்கள் கருதுகிறீர்கள், நான் கருதுகிறேன். அங்ஙனம் கருதுகிற காரணத்தால்தான் நான் அதில் ஈடுபடாமலிருக்கிறேன். முறை தவறென்று கண்டிக்கும்போது தூய்மையான நோக்கத்தை ஆராய்ந்து பார்த்து அதை நீக்குவதற்கு உங்களுக்கு வழிவகையிருக்குமானால் ஏன் அந்த வாய்ப்பை நீங்கள் இழக்கவேண்டுமென்று நான் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். காமராஜ் - பெரியார் சந்திப்பு இப்பொழுது தேவையேயல்லாது புதிய சட்டமல்ல. சட்டத்தை நிறைவேற்றிவிடலாம். நிறைவேற்றவும் போகிறீர்கள், நிறைவேற்ற துடித்துக்கொண்டிருக்கிறீர்கள். இதுவரை அப்படி ஒரு சட்டத்தை நிறைவேற்றாதது தவறுயென்றும் ஆளும் கட்சியைச் சார்ந்த சில அங்கத்தினர்கள் கூறினார்கள். சட்டம் இயற்றுவதினால் மட்டும் நமது தேசீயக் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளப்போவதில்லை சட்டங்கள் செய்யப்போகிற நேரத்தில் நீங்கள் யாரையோ வலுச்சண்டைக்கு அழைக்கிறீர்களென்று மக்கள் கருதி மூன்று ஆண்டுகள் தானே என்று எண்ணிக்கொண்டிருக்கும் மக்கள் தமிழகத்தில் ஏராளமாக இருக்கிறார்களென்று போலீஸ் அமைச்சர் அவர்கள் உணரவேண்டும். ஐம்பதினாயிரம் மக்கள் தஞ்சை மகாநாட்டில் கூடினார்களென்று சொன்னபோது போலீஸ் அமைச்சர் அவர்கள் நான் அதை நம்பவில்லையென்று சொன்னார்கள். அதை நம்ப அவர்கள் மறுக்கிறார்கள். நம்பினால் கொஞ்சம் நடுக்கம் எடுக்கும், ஐம்பதினாயிரமென்று எண்ண அவரது நெஞ்சம் கூசுகிறது,
போலீஸ் அமைச்சர் திரு. எம். பக்தவத்சலம்:— எனக்குத் தெரியாது, எனக்குவந்த தகவல்வேறு ஆனால் பத்திரிகைக்காரர்கள் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்றுதான் சொன்னேன்.