உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அமைகிறது. ஆனால் எத்தனை தடவை, எத்தனை கிளர்ச்சிகளை நீங்கள் இப்படி அடக்கிக் கொண்டிருக்கப் போகிறீர்கள் என்று கேட்கிறேன், முத்துராமலிங்க தேவரை ஒரு பக்கத்தில் பூட்டிக் கொண்டிருக்கிறீர்கள். பெரியார் ராமசாமியை ஒரு பக்கத்தில் பூட்ட இருக்கிறீர்கள், இப்பொழுது அரசியில் சட்டத்தைக் கொளுத்துவது, தேசீய தலைவருக்கு இழுக்கு செய்வது சட்ட விரோதமாகும் என்று சட்டம் கொண்டு வருகிறீர்கள். அரசியல் சட்டத்தைக் கொளுத்துவது அரசியல் சட்டத்திற்கு விரோதமாகும் என்று சங்கரன் அவர்கள் கூறினார்கள். ஆனால் எந்தப் புத்தகத்தையும் கொளுத்துவது அல்லது அவரவர் விருப்பப்படி செய்வதற்குள்ள உரிமை இருப்பதுபற்றி, அதே அரசியல் சட்டத்தில் குறிப்பிட்டிருப்பதை வழக்கறிஞராகிய அவர் உணரவில்லை. அரசியல் சட்டத்தில் குறைபாடுகள் இருக்கலாம். அதை சிலர் நாகரீகமாக சொல்வார்கள். சிலர் வெட்டு ஒன்று துண்டு இரண்டாகச் சொல்வார்கள், சிலர் பட்டும் படாததுமாகச் சொல்வார்கள். அரசியல் சட்டத்தில் உள்ள குற்றங் குறைகளை எடுத்துச் சொல்வதே கூடாது என்று சொல்வார்கள்போல் இருக்கிறது. அதற்கும் சட்டம் குறுக்கிடக் கூடும். அதேபோல், ஒருவரின் ஆறு வயது குழந்தை காந்தியாரின் படத்தை எடுத்து உடைத்து விட்டால், அவருக்கு வேண்டாத போலீஸ்காரர் இருந்தால் அவர் சட்டப்படி இக்குற்றத்திற்கு ஆளாகலாம். அதற்குப் பிறகுதானே கோர்ட்டிற்குப் போய், நான் அவமானப் படுத்தவில்லை, என் குழந்தை கீழே போட்டு உடைத்துவிட்டது என்று சொல்லி பிறகுதானே விடுதலைப் பெற்று வரவேண்டும். ஆகவே, நான் சொல்வது, வேண்டுமென்றே செய்யப்பட்டால், பொதுவிடங்களில் செய்தால் என்றுகூட எழுதாமல் விட்டிருக்கிறீர்கள் காந்தியின் படத்தைத் தொட்டால், அரசியல் சட்டத்தைத் தீண்டினால் மூன்று வருஷம். இது எதைக் காட்டுகிறது? வாசகங்களை எழுதுவதில் கூட ஏன் அலங்கோலம் இருக்கவேண்டும். எந்தச் சட்டத்தைக் கொண்டு வந்தாலும் அதன் வாசகம் எப்படியிருந்தாலும், உங்களுக்கு 150 பேர்கள் இருக்கிறார்கள், மன்னிக்கவேண்டும், இதற்கு 190 பேர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையின்பேரில் இச்சட்டத்தைக் கொண்டு வருகிறீர்களே தவிர பிரச்னையினடிப்படையை ஆராய்ந்து அதன் பின்னால் இருக்கும் பெரியாரின் மனப்போக்கை அறிய நீங்கள் முயற்சி எடுக்கவில்லை, இப்படிப்பட்ட தேவையற்ற, தீதான, கொடுங்கோன்மைக்கு வழி செய்யக்கூடிய, சர்வாதிகார நாடுகளில் கையாளக் கூடிய முறைகளை கை-