உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

என்னவென்று ஆராய்ந்து, பெரியாரை சந்தித்து அவர் மூலம் இந்த நாட்டிலே நன்மை ஏற்பட நீங்கள் வழி செய்து, அந்த வகை உங்கள் கௌரவத்திற்கு பாதகம் இல்லை என்று உணரவேண்டும் என்று சொல்லிக் கொண்டு, இப்பொழுது தேவை சட்டமல்ல, சந்திப்புதான். இப்பொழுது தேவை ஒருவரை ஒருவர் கலந்து பேசுவதே தவிர ஒருவரை ஒருவர் மிரட்டுவதல்ல. இப்பொழுது தேவைப்படுவது அனைவரும் ஒன்றாக உட்கார்ந்து பேசுவதே தவிர வலுத்தவன் இளைத்தவன் என்று சொல்லி, உள்ளே வைத்து பூட்டுவதல்ல என்று சொல்லிக்கொண்டு இந்த மசோதா தேவையற்றது, தீதானது கொடுங்கோன்மைக்கு வழி தேடுவது என்று சொல்லிக் கொண்டு எனது உரையை முடித்துக் கொள்கிறேன்.

தேசீய அவமதிப்பு தடுப்பு மசோதா இறுதி சொற்பொழிவு:—

சட்ட மன்றத் தலைவரவர்களே, இந்த மசோதா சட்டமாவதற்கான கடைசிக் கட்டத்திலும் நான் இதை ஆட்சேபிக்கிறேன் என்பதை பணிவன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன். அவசரப்பட்ட நடவடிக்கையிலீடுபட்டு நிலைமையை அலங்கோலமாக்காதீர் என்ற ஒரு வாதத்தை நான் முக்கியமாக கூறிக்கொள்ள விரும்புகிறேன். கனம் நிதி அமைச்சரவர்கள் இந்த நேரத்தில் எனக்கும், நான் சார்ந்திருக்கிற கட்சிக்கும் அவராலான சிறு கைங்கரியத்தைச் செய்யலாமென்று எடுத்துக்கொண்ட முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டதாக அவர் கருதிக்கொண்டிருக்கலாம்.

நிதி அமைச்சர் திரு. சி. சுப்ரமண்யம்:— வெற்றி பெறவில்லை. நீங்கள் இன்னும் பேசிமுடியவில்லையே.

திரு. சி. என். அண்ணாதுரை:— என்றாலும் அதிலே சில கொள்கைப் பிரச்னைகள் வெளியிடப்பட்ட காரணத்தால், அதுபற்றிமட்டும் நான் சில வார்த்தைகளைப் பேச கடமைப்பட்டிருக்கின்றேன். திராவிடக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் வெவ்வேறாகப் பிரிந்திருந்தாலும், இன்றைய தினம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் திரை கிழிக்கப்பட்டு விட்டது. அவர்களுடைய உண்மை சுவரூபத்தை நாங்கள் கண்டுவிட்டோமென்று நிதி அமைச்சரவர்கள் கூறினார்கள். எங்கள் சுவரூபத்தை நாங்கள் அவ்வளவு சுலபமாக காட்டிவிடமாட்டோம். நிதி அமைச்சரவர்-