உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

என்று குறிப்பிட்டார்கள். என்னை வருந்தி வருந்தி அழைத்தார்கள், நான் சென்றேன், அந்த மொழிக் கமிட்டியில் பேசியதை அங்கே மறுக்கவில்லை என்று சொன்னவர்கள், ஒன்றே ஒன்று சொன்னார்கள் 344-வது பிரிவை மாற்றம் செய்யவேண்டுமென்று சொன்னேனென்று சொன்னார்கள். யார்யாரை அழைத்தாலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்க வேண்டுமென்று எண்ணுவது மனித சுபாவம். அந்த மனித சுபாவத்தின்படி விட்டுக் கொடுக்கக்கூடிய பிரச்னைகளில், திராவிட முன்னேற்றக் கழகம் விட்டுக் கொடுத்து உண்மையில் பிரச்னைகளைத் தீர்க்க முயலும். அந்த விதத்தில் இந்தப் பிரச்னை நம்மைக் கட்டுப்படுத்துவதோடல்லாமல், எதிர்கால சந்ததியார்களின் வாழ்வையும் கூடக் கட்டுப்படுத்துவதால் சில அடிப்படை உண்மைகளை கசப்பாயிருந்தாலும் கூட ஆராய்ந்து பார்க்க வேண்டியவர்களாயிருக்கிறோம். இந்த நாட்டில்—இந்த நாடு என்று குறிப்பிடும்போது நம்முடைய மாநிலத்தை மனதில் வைத்துக்கொண்டு பார்த்தால்—இப்போது ஒரு பழைய தலைமுறை வேகமாக மறைந்து விடுகிறது, ஒரு புதிய தலைமுறை வேகமாக எழுந்து வருகிறது—இந்த இரண்டிற்குமிடையில் நாம் வாழ்ந்து வருகின்றோம் பழைய தலைமுறை இந்தியா, இந்திய துணைக் கண்டம், இந்தியர், இந்தி என்றும், இந்தியா விடுதலை பெற்றதால் இந்திதான் தேசீயமொழி என்று ஆழ்ந்த நம்பிக்கையோடு கருதுகின்ற ஒரு தலைமுறை. இனி வரவிருக்கின்ற தலைமுறையில், இந்தியா என்பது உண்மையில் ஒரு கற்பனை என்று கருத்துக்கொண்டிருக்கிற நாங்கள் வெற்றிபெறக் கூடுமானால், இந்தியா என்பது ஒரு துணைக் கண்டமாக ஆக்கப்பட்டு பல மாநிலங்களைக் கொண்டதாகக் கருதி தனி நாடுகளாக ஆகப்போகின்ற அத்தகைய நேரம் வரப்போகிறது—இந்தியா, இந்தியர். இந்தி என்று நண்பர் சின்னத்துரை அவர்கள் கொண்டிருக்கிற மன எழுச்சி அது வெற்றிபெறப் போவதில்லை—அப்படி சின்னத்துரை அவர்கள் வெற்றி பெறுவாரானால் அவருடைய மன எழுச்சி நிரந்தரமானதாக இருக்கும். இந்த இரண்டுக்குமிடையில் நாம் இருக்கிறோம், நாம் இன்றைக்கு பழைய நினைவுகள் ஒருபுறம் இழுக்க மற்றொரு புறத்தில் எதிர்கால சந்ததியார்களின் வாழ்வின் நினைவுகள் இழுக்க, நாம் இக்கட்டான நிலையிலிருக்கின்ற ஒரு தலைமுறை என்று கருதுகின்றேன். ஆகையால்தான் இங்கே செய்யப்போகின்ற தீர்மானம் பழைய காலத்திலிருந்து வந்ததை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கக்கூடாது.