உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

146

தில் ஆட்சி எப்படியிருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்து, ஒருவருக்கொருவர் எதை வேண்டுமானாலும் பரிமாறிக்கொள்ளலாம் என்ற ஆனந்தத்தில் செய்துகொண்ட காரியம் இது. ஹோலிபண்டிகையன்று வேடிக்கையாக ஒருவருக்கொருவர்மீது வண்ணச் சாயத்தை வீசிக் கொள்ளுவதுபோல, ஒருவர்க்கொருவர்மீது வாதங்கள் ஆனந்தமாக வீசிக்கொள்ளப் பட்டன. ஆற அமர ஆராய்ந்து இது செய்யப்படவில்லை என்று அரசியல் சட்டத்தை ஆராய்ந்திருக்கும் பெரிய அரசியல் சட்ட நிபுணர்கள் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். ஸிலோன் நாட்டிலிருக்கிற அரசியல் நிபுணர், நீதித்துறை தலைவர், அரசியல் அறிவாளி ஐவர்ஜென்னிங்ஸ் (Ivor Jennings) அவர்கள் இந்திய அரசியல் சட்டம் மிக அவசரமாக ஆக்கப்பட்டது என்றும், மிக அதிகமான அளவு கூட்டப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். பொதுவாக அரசியல் சட்டத்தில் மாற்றங்கள் செய்யவேண்டியது ஏராளமாக இருக்கின்றன என்ற கருத்து மேலோங்கி இருக்கின்ற நேரத்திலே, மொழிப் பிரச்னை சம்பந்தப்பட்ட வரையில் இந்திய அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்துகொள்வதுதான் உண்மையிலேயே நமக்கும் எதிர்காலத்திற்கும் நல்லது நல்ல பாதுகாப்பு அளிப்பதாக இருக்கும். அந்தப் பாதுகாப்பைப் பெறுவதற்காகத்தான் இந்த அறிக்கையிலே எங்களுடைய திருத்தத்தை இணைத்துக் கொள்ளுவது பொருத்தம் என்பதை நான் நிதி அமைச்சர் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

சின்னதுரை அவர்கள் இந்திதான் மக்களுடைய மொழி என்று வலியுறுத்தினார்கள், அவர் காட்டிய மன எழுச்சியை அருள் கூர்ந்து நோக்கவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் கொண்டிருக்கும் கருத்தை தெளிவாக துணிவுடன் எடுத்துக் கூறினார்கள். அவர்கள் கொண்டிருக்கும் கருத்தை நான் குறை சொல்லவில்லை. அவருக்கு ஏற்பட்ட துணிவையும், தெளிவையும் நான் பாராட்டுகிறேன், வரவேற்கின்றேன். இந்தி தான் மக்கள் மொழி என்று தமிழகத்தில், இந்த மாநிலத்தில், இந்த ஆட்சி மன்றத்தில், இன்றைய தினம் சொல்லுவதற்கு சின்னதுரை அவர்கள் எந்த அளவுக்கு விருப்பப்படுகிறார்களோ, அதே போல் இந்தியத் துணைக்கண்டத்திலே, இந்த அறிக்கையோடு இந்திய அரசியல் சட்டத்தை திருத்துவதற்கான திருத்தம் இணைக்கப்படாமல் இருந்தால், இந்தி தான் மக்கள் மொழி என்று சொல்-