உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

பெற்றிருக்கின்றன. ஆனால், ஆட்சிமொழி அந்தஸ்தைப் பொறுத்தவரையில், தமிழ்தான் தமிழகத்தில் ஆட்சி மொழி. வேறு சில ராஜ்யங்களிலுள்ள மொழிகள் ஆட்சி மொழி அந்தஸ்தைப் பெறாமல் இருக்கக்கூடும், அவைகளை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. அந்த ராஜ்யங்களைப் பார்த்து நாம் பரிதாபப்படுவோம். நமக்கு இருக்கும் துணிவு அந்த ராஜ்யத்தினருக்கு இல்லையே என்று நாம் பரிதாபப்படுவோம். தமிழை இந்த ராஜ்யத்தில் ஆட்சி மொழியாக்குவதற்கான துணிவைப் பெற்ற கனம் நிதி அமைச்சருக்கு நன்றி கூற நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். நம் மாநிலத்தில் எது ஆட்சி மொழி என்பதைப் பொறுத்த வரையில் நம்மிடையே அபிப்பிராயபேதம் இல்லை. நம் ராஜ்யத்தில் தமிழ்தான் ஆட்சி மொழி. இந்தியாவில் நிர்வாக மொழி எதுவாக இருக்க வேண்டும் என்பதுபற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னையை மூன்று விதமாக நோக்கலாம். இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் இப்பிரச்னையைப் பார்ப்பது ஒரு விதம். இரண்டாவது, இந்தியா என்றென்றைக்கும் ஒன்றாக இருக்கப்போவதில்லை, அது பிரியப்போகிறது என்ற எண்ணத்தை மனதில் வைத்துக்கொண்டு, பிரியும்வரையுள்ள இடைக்காலத்தில் எது நிர்வாக மொழியாக இருக்க வேண்டுமென்று பார்ப்பது ஆகும். எங்களைப் பொறுத்த வரையில் இந்தியா பிரியப் போகிறது என்ற எண்ணத்துடன்தான் இப்பிரச்னையை நாங்கள் அணுகுகிறோம். நிர்வாகத்தில் மத்திய சர்க்காரிடம் எந்த எந்தப் பொறுப்புகளை மாத்திரம் ஒப்படைக்கலாம் என்று பார்த்து அவர்களிடம் இருக்கும் அதிகப்படியான பொறுப்புகளைக் குறைத்துவிட்டால், அப்போது மத்திய அரசாங்க நிர்வாக மொழி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்ற எண்ணத்துடன் இப்பிரச்னையை அணுகுவது மூன்றாவது விதம் ஆகும். இந்த மூன்றையும் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டுமென்று கனம் நிதி அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன். அவர் தம்முடைய சாமர்த்தியமான வாதத்தைக் காட்டுவதற்காக இவைகளைப் பற்றி யோசித்துப் பார்க்கவேண்டுமென்று அவரை நான் கேட்டுக் கொள்ளவில்லை; தம்முடைய இதயத்தை அவர் காட்டுவதற்காக இவைகளைப்பற்றி யோசித்துப் பார்க்கவேண்டுமென்றுதான் நான் கூறுகிறேன். அன்றையதினம் அவர் பேசியபோது, "உங்களுடைய இதயத்தைக் கேட்கிறேன், சாமர்த்தியத்தை அல்ல" என்று அவரிடம் பன்னிப் பன்னிக் கூறினேன். இதயத்தில் ஆழ்ந்த கருத்-