உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

150

எதிர்க்கவில்லை என்று அறிக்கையிலிருந்து தெரிவதால், தமிழ் நாட்டில் ஹிந்தியைப் புகுத்தலாம் என்று சொல்ல முற்படுவார்கள். ஆகவேதான், இந்தியை எதிர்ப்பவர்களும், இந்தி ஆட்சிமொழியாகக் கூடாது என்று சொல்பவர்களும், இந்தி மத்திய அரசாங்க ஆட்சிமொழியாக ஆக்கப்படவேண்டுமென்று கூறும் அரசியல் சட்டப் பிரிவை எதிர்ப்பவர்களும், அந்தப் பிரிவை திருத்தவேண்டுமென்று வாதாடுபவர்களும் தமிழ் நாட்டில் ஏராளமான எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசாங்கத்திற்கு, உணர்த்துவதற்கு நாங்கள் வகைசெய்கிறோம். நாங்கள் இவ்வாறு செய்வது, இந்தித் திணிப்பை எதிர்த்து மத்திய அரசாங்கத்திடம் வாதாடுவதற்கு இந்த மாநில ஆட்சியாளர்களுக்கு உதவும்படியாக இருக்கும் என்று சொல்வேன்.

"நாங்கள் 150 பேர் இருக்கிறோம், எங்களுக்குக் கிடைக்கும் மதிப்பு போதும்" என்று காங்கிரஸ் கட்சிக்காரர்கள் சொல்லக் கூடும். அந்த மதிப்பை நான் குறைத்துப் பேசவில்லை. எதிர்க் கட்சியிலே உள்ளவர்கள் வளரக் கூடியவர்கள் என்பது ஜனநாயக தத்துவம்; அவர்கள் வளரக்கூடியவர்கள் என்பதை எண்ணித்தான் பார்ப்பார்கள். ஆகவே, இங்கே இந்திக்கு எதிரிடையான கருத்து எந்த அளவுக்கு இருக்கிறதென்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதற்காகவும், இந்திய அரசியல் சட்டத்திலே திருத்தம் வேண்டும் என்ற அந்தத் திருத்தத்தையும் அதிலே இணைத்துக்கொண்டால், அதற்குப் பிறகு இங்கிருந்து ஏகமனதாக இந்த அறிக்கையை அனுப்பியதாகக் கொள்ளலாம். ஏகமனதாக அனுப்பப்படுகிற அறிக்கை ஆனாலும் ஒவ்வொரு கட்சியினுடைய கருத்தும் அதிலே குறிப்பிடத்தக்க அளவு இணைந்திருப்பதை வடநாட்டிலே உள்ளவர்கள் உணருவார்கள்.

"வடநாடு எது? தென்னாடு எது?" என்று கேட்கப்பட்டது. அப்படிக் கேட்கும்போது, சாதாரணமாக படத்தில் ஒரு கோடு போட்டுக் காட்டிவிட முடியாது. இதற்கு மேலே இருப்பது வடக்கு, இதற்குக் கீழே இருப்பது தெற்கு என்று எடுத்துச் சொல்வதற்கில்லை. அப்படிச் சொல்லக் கூடிய அரசியல் தத்துவம் இல்லை. வடநாடு என்று சொல்லும்போது எல்லா மானிலங்களுக்கும் முழுப் பொறுப்பையும், அதிகாரத்தையும் ஏற்றுக்கொள்கிற மத்திய சர்க்காரையும், அந்த மத்திய சர்க்காரோடு நெருங்கிய தொடர்பு இருக்கிற ராஜ்யங்களையும் மனதிலே வைத்துக்கொண்டு