உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

151

தான் வடநாடு, வடநாடு என்று பேசுகிறோம் என்று குறிப்பிடுகிறேன்.

இந்த மொழிப் பிரச்னையில் நாமெல்லோரும் சமரசத்திற்கு வந்துவிட்டோம் என்று தெரிவிப்பதை விட, அடிப்படையில் சில மாறுபாடுகள் இருக்கின்றன என்பதை மத்திய சர்க்காருக்கு உணர்த்துவது மிகப் பொருத்தம் என்று கருதி, இந்திய அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமென்ற திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய இந்தத் திருத்தத்தை நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம்.

மற்றபடி மொழிப் பிரச்னையிலே, மக்கள் மொழியாக இந்தி தான் இருக்கக்கூடும் என்று சொல்கிற அந்தநிலைமையை இந்த நாட்டிலே வளர விடாமல் தடுப்பதற்கு ஏற்ற வகையிலே ஆட்சியாளர் இருப்பதைப் பற்றி நான் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அளவுக்கு அவர்களுக்கு இன்றைய தினம் வெறி இல்லை. நம்முடைய அமைச்சரவை, அதிலும் குறிப்பாக நமது நிதி அமைச்சர் சுப்ரமண்யம் அவர்களுக்கு தமிழினிடத்திலே நீங்காத பற்று இருக்கிறதென்பதைப் பார்த்து நான் மெத்த மகிழ்ச்சி அடைகிறேன். அது கொங்கு நாட்டுக்கே இருக்கும் தனிச் சிறப்பு. கொங்கு நாட்டுத் தமிழ் ஒன்றுதான் பிறமொழிக் கலப்பு இல்லாத தமிழ்; வடமொழியோ, வேறு எந்த மொழியோ கலப்பு அதிகம் இல்லாத தமிழ். அப்படிப்பட்ட கொங்கு நாட்டுச் செல்வர் தமிழுக்காகப் பாடுபடுவதைப்போல், எதிர்காலத்தில் படிக்கும் பிள்ளைகளுக்கு, வருங்காலச் சந்ததிகளுக்கு ஆபத்து வராமல் இருக்கவேண்டுமானால், நாங்கள் சொல்லுகிற திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ளவேண்டும். பதினைந்து பேர் சொல்லும் திருத்தத்தை 150 பேர் ஏற்றுக்கொள்ளலாமா என்ற அரசியல் கணக்குப் போடாமல் "Politics is not mere arithmetic but is a political philosophy" என்ற கருத்தின்படி, எதிர்க்கட்சிகள் வளரக் கூடியன என்ற தத்துவம் என்ற முறையிலே எங்களுடைய திருத்தத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று நிதி அமைச்சர் அவர்களையும் ஆளும் கட்சியையும் வேண்டிக் கேட்டுக்கொண்டு என்னுடைய உரையை முடித்துக் கொள்கிறேன்.

🞸⁠🞸⁠🞸⁠🞸