152
13—3—1958]
[வியாழக்கிழமை
(மது விலக்குச் சட்டம் பற்றி எழுந்த விவாதத்தில் நிகழ்த்திய சொற்பொழிவு....
பிற்பகல் 12–10
கனம் சபாநாயகர் அவர்களே, மதுவிலக்குச் சட்டம் நம்நாட்டில் எந்தஅளவிற்கு வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு நாம் பெருமைப்பட வேண்டும். எந்தஅளவிற்கு அது தோல்வியடைந்திருக்கிறதோ அந்த அளவிற்கு நம்மைப்பற்றிக் கேவலமான ஒரு கருத்து நமக்குள்ளேயே எல்லாக் கட்சியினரிடத்திலும் இருந்து வருகிறது. எனவே, ஒரு குறிப்பிட்ட கொள்கையில் எல்லாக் கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கொண்டிருக்கின்றன என்றால், அது மதுவிலக்குத் திட்டம் நம் நாட்டில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற கொள்கைதான் ஆகும். இந்த கொள்கை குறித்து எல்லாக் கட்சிகளும் ஒருமித்த கருத்துக் கொண்டிருக்கும்போது, சில கடுமையான தண்டனைகளை விதிப்பதற்கான ஷரத்துக்கள் ஆளும் கட்சியினரால் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்த மசோதாவில் புகுத்தப்பட்டிருப்பது சரிதானா என்பது பற்றியும், அந்த ஷரத்துக்கள் கொண்ட மதுவிலக்குச் சட்டம் வெற்றியடையுமா என்பது பற்றியும் நாட்டு மக்கள் என்ன கருதுகிறார்கள் என்பதை அறிவதற்காக, சில காலத்திற்கு மசோதாவை சட்டமாக்குவதை ஒத்தி வைக்கவேண்டுமென்று கோரி எதிர்க்கட்சியினர் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ள இந்தத் திருத்தத்தை ஆளும் கட்சியினர் ஏற்றுக்கொண்டால், அது மதுவிலக்குத் திட்டம் குறித்து இந்நாட்டில் எல்லாக் கட்சியினரும் ஒருமித்த கருத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உலகம் அறிவதற்கான ஒரு நல்ல வாய்ப்பை உண்டுபண்ணும்.
மதுவிலக்குச் சட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குக் கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டுமென்று பல மேடைகளிலே பேசப்படும் நேரத்தில், அந்தக் கடுமையான தண்டனை மதுவிலக்குக் குற்றத்தைத் துணிந்து செய்கின்ற பெரிய மனிதர் பேரிலேயே வீசப்படவேண்டுமென்ற கருத்திலே பேசப்பட்டு வருகிறது. "கடுமையான தண்டனை" என்று சட்டத்திலே மட்டும் குறிப்பிட்டுவிட்டு, குற்றங்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்போ, கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு மன்றங்களிலே எடுத்துச் சொல்லும் தன்மையோ, அதற்கு தரப்படும் கடுமையான தண்டனையை வாங்கித்-