உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

கொடுத்துவிடுவார்கள். இப்படிச் செய்தால் நாம் அந்தப் பண்ணைகளுக்கு முதலீடு செய்யவேண்டியதில்லை. இப்படி இந்த திட்டத்தை சுலபத்தில் நிறைவேற்றலாம் என்று நான் கருதுகிறேன். விதைகள் கொடுப்பதனைப்பற்றி, அந்த விதைகள் ஏழை உழவனுக்குக் கிடைக்கவில்லை என்று ஒரு அங்கத்தினர் சொன்னார். எந்த நேரத்தில் “விதைக்க விதை வேண்டுமே" என்று பரிதாபத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்களோ, அந்த நேரத்தில் விதைகள் வராமல், அறுவடை காலத்தில் வருவதால் அதையும் சேர்த்து மார்க்கெட்டில் விற்றுவிடுகிறார்கள் என்று கனம் அங்கத்தினர் ஒருவர் அநுபவம் காரணமாக கிராமப்புறத்தில் இருக்கும் நிலைமையைத் தெளிவாகச் சொன்னார்கள். ஏட்டிலே திட்டங்களைக் காட்டுவதால் மட்டும் பாராட்டுதலுக்குரியவர்களாக மாட்டார்கள் நாட்டை ஆளுகின்ற சர்க்கார். ஏட்டிலே போடுகின்ற திட்டம் எந்த அளவுக்கு ஒவ்வொரு வீட்டிலும் இதற்கு முன்னாலே இருந்ததைவிட வயற்றுக்கு ஒரு கவளம் சோறு அதிகமாகியிருக்கின்றது, தலைக்கு ஒரு உச்சிக்கரண்டி எண்ணெய் அதிகமாகியிருக்கின்றது, வாழ்வுக்கு ஒருவேளை நிம்மதி அதிகமாகி இருக்கின்றது என்பதைப் பார்க்கவேண்டும். நிம்மதி கலந்த புன்னகை தான் ஒரு நிதி அமைச்சர் எதிர்பார்க்கும் பரிசும் புகழுமாகும். தங்கள் கட்சிக்காரர்களும், எதிர்க் கட்சிக்காரர்களில் இரண்டொரு பேரும், புகழை வீசி விட்டார்கள் என்றால் அது எந்த அளவும் பலனளிக்காது. அதை நான் நிச்சயமாக உணர்ந்திருக்கிறேன்.

போன ஆண்டு 38 விதைப் பண்ணைகள் திறக்கப்பட்டன, இந்த ஆண்டு 136 பண்ணைகள் திறக்கப் போகிறோம், என்று நிதி அமைச்சர் அவர்கள் ஆவலோடு சொல்லுகின்ற காரணத்தால் நாம் அதனை நம்பவேண்டி இருக்கிறதே தவிர, இதுவரை நடந்து வந்திருக்கிற முறையைப் பார்த்தால், அந்த 136 பண்ணைகளும் இந்த ஆண்டிலேயே திறக்கப்பட்டுவிடுமா என்கிற ஐயப்பாடு இருக்கின்றது. சென்ற ஆண்டு வரவு செலவு திட்டத்திலே, "இந்த ஆண்டு 50 விதைப் பண்ணைகள் திறக்கப் போகிறோம்" என்று வாக்குறுதி அளித்தும் அதில் 38 தான் திறந்தார்கள். அதாவது 50 சொல்லி 38 என்றால், இப்போது 136 சொல்லி 36-ஓடு நின்று விட்டால் என்ன செய்வது—"ஆண்டவனே, அவருக்கு அப்படிப் பட்ட ஒரு எண்ணத்தைத் தராமல், எல்லாப் பண்ணைகளையும் திறக்கவேண்டும் என்ற ஒரு எண்ணத்தைத் தரவேண்டும்" என்று நான் ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

3