58
ஆகையினால் இந்த சமூகத்தின் நிலையை மாற்ற வேண்டுமென்ற கருத்து 1919 லிருந்தே சர்க்கார் அளவுக்கு வந்து, அதற்கான முயற்சி எடுத்துக் கொள்ளப்பட்டது. அந்த முயற்சி எங்கே? இன்றையத்தினம் எடுத்துக்கொள்ளுகிற முயற்சிகள் எங்கேயென்று ஒப்பிட்டுப் பார்க்கும் நேரத்தில் மலைக்கும் மடுவுக்கும் ஆக வித்தியாசம் இருப்பதை நான் அறிகிறேன். ஆனால் அப்போது வசூலிக்கப்பட்ட வரித்தொகையையும், இப்போது வசூலிக்கப்பட்டு வரும் வரித்தொகையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அன்றைய நாட்டு நிலைமையையும், இன்றைய நாட்டு நிலைமையையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அன்றைக்கு என்ன என்ன காரியங்களைச் செய்திருக்கிறார்களோ அதே காரியங்களை இன்றைக்கு இருக்கின்ற வசதிக்கேற்றபடி விரிவாக்கிக்கொண்டு இருக்கின்றோமே தவிர புரட்சிகரமான மாறுதல் எதுவுமே இல்லை.
ஹரிஜன முன்னேற்றத்திற்கு என்று குறிப்பிட்டுக் கேட்கிற நேரத்தில், ஹரிஜன நலனுக்குச் செலவிட என்று கேட்பதை காட்டிலும் ஹரிஜனங்களுடைய நலனுக்காக இன்ன இன்ன காரியங்களைச் செய்திருக்கிறோம். செய்யப்போகிறோம் என்பதாக ஆராய்ந்து அலசிக்காட்டி இருக்கலாம். ஹரிஜனங்கள் பெரும்பெரும் தொழில்களிலும் உயர்ந்த உத்தியோகங்களிலும் இருப்பதாகக் காட்டுகின்ற நேரத்திலே காங்கிரஸ் ஆட்சி ஏற்படுவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே, காங்கிரஸ் ஆட்சி ஏற்படுமா என்று காங்கிரஸ்காரர்களே ஐயமுற்றுக்கொண்டிருந்த காலத்திற்கு முன்னால் காங்கிரஸ் கட்சி நாட்டை மீட்குமா என்று அரசியல் உலகத்தில் ஐயப்பாடு இருந்தபோதே இதே மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட பெருங்குடி வகுப்பைச் சேர்ந்த M. C ராஜா மந்திரியாகவும், ஸ்ரீ சிவராஜ் என்ற பெருங்குடி மகன் சட்டக் கல்லூரி பேராசிரியராகவும் ஸ்ரீ சிவசண்முகம் வேறு துறையில் நல்ல திறமை பெற்றவராகவும் அகில இந்தியாவுக்கும்—அகில இந்தியா என்ன—உலகம் முழுவதற்கும் தாழ்த்தப்பட்ட மக்களின் குறைபாடுகளை எடுத்துக்காட்டி அமரராக டாக்டர் அம்பேத்கார் விளங்கியிருப்பதையும் மறந்துவிடுவதற்கில்லை.
ஹரிஜன பிரச்னையைக் கவனித்துப் பார்த்தால், ஒவ்வொரு கட்டத்தில் ஒவ்வொருவருடைய துணையை அவர்கள் நாடவேண்டியிருக்கிறது. ஆங்கில ஆட்சி வந்தவுடன்தான் ஹரிஜன மக்கள் முதன் முதலில் நாகரீகமாக நடத்தப்பட்டார்கள் என்பதை