62
அரசாங்க அதிகாரிகள் தம்தம் பட்டியலைப் படிக்கவும், அதிகாரியிடம் சலுகை பெற வேண்டியவர்கள் தாமே புன்னகையை அடிக்கடி வருவித்துக்கொள்ளவும், பக்கத்திலே இருக்கும் ஒருவரிடம் 'இவர் யார்' என்று அதிகாரி கேட்க, "இவர்தான் இந்த வேலைக்கு கண்டிராகட் எடுத்துக்கொள்ள விண்ணப்பம் போட்டவர்" என்று கவனப்படுத்துவதும் ஆக இந்த முறையில்தான் இந்த ஹரிஜன தினம் கொண்டாடப்படுகிறது. இப்படிப்பட்ட தினங்கள் நாம் வாரத்திற்கொருமுறை நடத்தினாலும் கூட நிச்சயமாக ஹரிஜனப் பிரச்னை தீராது எனச் சொல்வேன்.
ஆகையால் கனம் அமைச்சர் அவர்களுக்கு சொல்லிக்கொள்கிறேன். ஒரு ஐந்தாண்டு காலத்திற்கு ஹரிஜன தினங்களை மிகவும் தீவிரமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு உயிர் ஊட்டும் வகையில் உள்ளத்துக்கு உறுதியை, வீரத்தை ஊட்டும் வகையில் மாபெரும் தினமாகக் கொண்டாடச் செய்தாலேயே பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுவிடும். ஹரிஜன தினத்தில் சேரியில்—ஊரில் உள்ளவர்கள் அத்தனை பேரும் அன்றைய தினம் பூராவும் 24-மணி நேரமும் ஒன்றாகக் கலந்து உறவாடத் தக்க வகையில், ஒரு ஒட்டுறவை ஏற்படுத்த ஒரு பெரும் கோலாகலத் திருவிழாவாகக் கொண்டாடப்பட ஏதாவது வழிமுறைகளை வகுத்துத் தந்தால் அந்தச் சமுதாயத்தின் நிலைமையில் புரட்சிகரமான மாறுதல்களைச் செய்ய முடியும். அன்றைய தினம் ஆண்டவனை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள். வீழ்ந்து வணங்குவோம். வணங்கச் சொல்வோம். நல்ல காரியத்திற்கு வணங்கினாலும் வணங்கலாம். அதைவிட்டு அந்த ஹரிஜன தினத்தில் அதிகாரிகள் பட்டியல் படிப்பதும், அவரோடு உள்ளவர்கள் புன்னகைப் பூப்பதுமாக, சுவையற்ற தினமாக இருந்து வருவதை உடனடியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
மற்றும் ஒன்று, கலப்பு திருமணத்தைப் பற்றி இங்கே வலியுறுத்தப்பட்டது. என்னைப் பொறுத்த வரையில் கலப்புத் திருமணத்தை நான் ஆதரிப்பேன். 'கலப்புத் திருமணம் செய்து கொள்வதுதானே' என்று கேட்டால் அந்தப் பருவத்தை நான் தாண்டிவிட்டேன். எனக்கு அது அவசியமில்லாமல் இருக்கிறது.
முதலமைச்சர் காமராஜ் அவர்கள் நல்ல வேளையாகத் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் அவர் மட்டும் கலப்புத் திருமணத்திற்கு முன்மாதிரியாக இருந்து வழிகாட்டினால், இந்த