63
மாநிலமே ஆச்சரியத்தில் அதிர்ச்சி உறும்; பாரதமே துள்ளி எழும், கொள்கைக்காக வாழ்கிறவர் என்று எல்லோரும் பாராட்டுவார்கள். அவர் தலைமையில் இயங்குவதில் நாம் எல்லோரும் பெருமைப் படுவோம். (சிரிப்பு.)
கலப்புத் திருமணத்தை ஆதரிப்பதற்கு முன், மற்றொன்றையும் யோசித்துப் பார்க்கவேண்டும், கலப்புத் திருமணம் செய்துவிட்டு அதற்குப் பிறகு பிறக்கும் குழந்தைகள் சமுதாயத்தில் எப்படி ஏற்றுக் கொள்ளப்படுவார்கள் என்கிற பிரச்னையை நாம் தீர்க்கவேண்டும். சமுதாயத்தில் சாதி மனப்பான்மையை ஒழித்து, சாதி பாகுபாடுகளையும் நீக்க வேண்டும். சாதி பாகுபாட்டை யார் ஆதரித்தாலும் சரி, எந்த உரிமையின் பெயரால் ஆதரித்தாலும் சரி, எத்தனை பழைய ஏடுகளை எடுத்துக் காட்டினாலும் சரி, சாதி பேதம் ஆகாது. இந்த சமுதாயத்தின் சாதி மனப்பான்மை மாற்றப்பட்டாலொழிய கலப்புத் திருமணத்தால் பிறக்கின்ற குழந்தைகள் தாங்கள் மணம் செய்துகொள்ளுகின்ற நேரத்தில் நல்லபடியாக சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டார்கள். ஆர்வத்தின் காரணமாக கலப்புத் திருமணம் செய்துகொண்டு, பின்னர் அதன்மூலம் பிறக்கின்ற குழந்தைகள் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படாத நிலமை நீடித்தால், பிரச்னை தீர்ந்துவிட்டதாகக் கருத முடியாது. ஆகவே கலப்பு திருமணம் அதிகமாகப் பரவ வேண்டுமானால், அடிப்படையிலே நாட்டிலுள்ள சாதி மனப்பான்மை ஒழிக்கப்பட வேண்டும் என்பதை அறிவும் ஆர்வமும் உடைய அமைச்சருக்கும் இப்பேரவையின் உறுப்பினர்களுக்கும் சபாநாயகரின் மூலமாக கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
கலப்புத் திருமணம் என்பது லச்சியத்துக்காகச் செய்யப்படுவது மாத்திரம் அல்லாமல், நம் சமுதாயத்தையே மாற்றி அமைக்க எடுத்துக் கொள்ளப்படுகிற ஒரு தேசீய முயற்சியாக இருக்க வேண்டும். இந்தத் தேசீய முயற்சி, முயற்சி அளவிலே இல்லாமல் நிச்சயமாகச் செயல்பட வேண்டும். அப்போது தான் நிச்சயமாக சாதிபேதத்தை ஒழிக்க முடியும். ஆகவே, உடனடியாக சாதி பேதத்தைப் போக்குவதற்காக நல்ல சீர்த்திருத்தப் பிரச்சாரத்தில் நாட்டை ஆளுகின்ற சர்க்கார்—சகல துறைகளிலும் திட்டங்களிலும்—ஈடுபட்டாக வேண்டும்.
சாதியை உண்டுபண்ணினவர்கள் திருந்தி விட்டார்கள்—உலகப்போக்கை உணர்ந்து மாறிவிட்டார்கள். ஆனால் இதர