உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சாதிக்காரர்களால் விளையும் தொல்லைதான் அதிகம்" என்பதாக ஒரு உறுப்பினர் குற்றம் சாட்டினார். அது உண்மைதான், சாதிப்புற்று தோன்றிவிட்டதனால், அதிலே தோன்றியவை பலபல இன்றைக்கு கிராமப் புறங்களிலே தம்தம் உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதற்குப் போராடத்தான் போராடுகின்றன. தூங்கிக் கொண்டிருப்பவனை தேளும் கொட்டும், பாச்சையும் கடிக்கும். ஏமாந்தால் பாம்பும்தான் காலைச்சுற்றிக் கொள்ளும். இவற்றில் எதற்குக் கொடிய விஷம் அதிகம் என்பது அல்ல பிரச்னை. எந்தப் புற்றிலிருந்து அவை வெளிப்பட்டவை எனக் கண்டு. அந்தப் புற்றையே அழித்தாலொழிய அதிலிருந்து கிளம்புகின்ற இந்த விஷ ஜந்துக்கள்—தேள், பாச்சை, பாம்பு—நாட்டிலே பரவிக் கொண்டுதான் இருக்கும். புற்றையே அழிக்கும் வேலையில் மிகமிக துரிதமாக ஈடுபட்டாக வேண்டும்.

நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகிறேன். "சமூகம் இன்று ஒரு விதமாக இருக்கிறது. சாதியைப் பற்றிய பற்றுதல் தேர்தல் காலத்தில் வருகிறது"—என்று கனம் உறுப்பினர் ஒருவர் குறிப்பிட்டார். துரதிர்ஷ்டவசமாக அப்படித்தான் இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அதனால் சில வோட்டுகளும், கிடைக்கின்றன (சிரிப்பு). எந்தத் தொகுதியில் எந்த சாதியார் பெருவாரியாக இல்லையோ, அந்தத் தொகுதியில் அவர்களுக்கு ஆதரவு கிடைப்பதில்லை. இந்த நேரத்தில் எனக்குத் தமிழில் வழங்கும் ஒரு கொச்சைப் பழமொழி நினைவுக்கு வருகிறது "சாதி சோறு போடுமா" என்பர். நம்முடைய சாதியைச் சேர்ந்தவர் என்ற காரணத்திற்காக, ஒருவனுடைய வறுமை காலத்தில் பசியால், துன்புறும் காலத்தில், யாராவது அவனுக்குச் சோறு போடுகிறார்களா என்று பார்த்தால் கிடையாது. ஆனால் தேர்தல் காலத்தில் சாதியைச் சொல்லிதான் வோட்டுக் கேட்கிறார்கள். "நமக்குள் எவ்வளவோ இருக்கலாம்......ஆனால் நாம் எல்லாம்......!" என்று சொல்வதற்குள்ளேயே, 'ஆமாம் ...ஆமாம்......உங்களைத் தவிர வேறு யாருக்காவது வோட்டுப் போடுவேனா" என அவனும் ஒப்புக் கொள்ளுகிறான். எந்த சாதி பெருவாரியாக ஒரு தொகுதியில் இருக்கிறதோ, அந்தச் சாதியைச் சேர்ந்தவர்கள் தான் கவனிக்கப்படுகிறார்கள், ஆகையினாலே, சாதியினால் கிடைக்கக் கூடிய லாபத்தைப் போக்கத் தேவையான அளவில் இந்த அடிப்படை பிரச்னையாகிய சாதிபேதத்தை மாற்றி அமைக்க, நாட்டை ஆளுகின்ற சர்க்கார் நல்ல முறையில் திட்டங்களை வகுத்து தீவிரமான பிரசா-