உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

தாலும், மதிப்பளிக்காவிட்டாலும்—ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்—‘உங்கள் நிழலைப்போல் ஹரிஜன முன்னேற்றத்திற்குப் பாடுபடுவோம் நானும் என் கட்சியினரும்’ என்பதைச் சொல்லி, இந்த மான்யக் கோரிக்கையின் பேரில் கொண்டுவந்துள்ள வெட்டுப்பிரேரணையின் மீது என் கருத்துக்களைக் கூறிக்கொண்டு உரையை முடித்துக்கொள்கிறேன்.

✽⁠✽⁠✽⁠✽

24—7—1957

[புதன்கிழமை

[தொழில்துறைக்கு ஒதுக்கப்பட்டிருக்கிற மான்யத்தைப் பற்றி எழுந்த விவாதத்தில்...]

முற்பகல் 10–26.

சட்டமன்றத் தலைவர் அவர்களே, தொழில் துறையிலே ஒதுக்கப்பட்டிருக்கிற மான்யத்தின் பேரில் தரப் பட்டிருக்கிற வெட்டுதிட்டத்தை ஆதரித்து சில வார்த்தைகளை நான் பேசுகின்ற காலத்தில், தொழில் துறையிலே இன்னும் அதிகமான அளவுக்கு கவனம் செலுத்தப்படுமென்று சர்க்காருடைய திறமையை தூண்டுவதற்காக இந்தக் கருத்துக்களைச் சொல்லுவதாக சர்க்கார் கட்சியினர் எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தாங்கள் மூலமாக நான் கேட்டுக்கொள்ளுகிறேன்

பொதுவாக, தொழில் துறையைப் பொறுத்த வரையிலே, இந்த சர்க்காருக்கு ஒரு நல்ல திட்டம் இல்லை என்று நான் குற்றம் சாட்ட விரும்புகிறேன். அம்மாதிரி குற்றம் சாட்டுகிற நேரத்திலே, நான் அவர்கள் சார்பிலே வாதாடி. அவர்களுக்கு ஒரு திட்டம் இல்லாததற்கும் காரணம், திட்டம் வகுக்கின்ற பொறுப்பு அவர்களிடம் இல்லை என்ற சமாதானத்தை அவர்கள் சார்பிலே நான் தேடிக்கொள்ளுகிறேன். அப்படி தேடிக்கொள்ளுகின்ற நேரத்திலே, மாநில ஆட்சி பொறுப்பில் இருக்கின்றவர்கள் திட்டம் வகுக்கின்ற பொறுப்பு வேறு ஒரு இடத்தில் இருப்பது தங்கள் வளர்ச்சிக்கு உகந்தது அல்ல என்ற கருத்துப்பட, தங்களுடைய சொல்லையும், செயலையும் ஓரளவுக்கு பக்குவப்படுத்திக் கொள்வார்களேயானால், தொழில் துறையிலே நல்ல திட்டங்கள் வகுப்பதற்கு இந்த மாநிலத்திற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கும் என்று நான் கருதுகிறேன். நான் இதற்கு நாட்டுப் பிரிவினையை ஆதாரமாகக் காட்டவில்லை. நான் அப்படி ஆதாரமாகக் காட்டினால் அதனால் ஆட்சியாளர்களுக்கு சில சங்கடங்கள் ஏற்படலாம்.