உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73

அமைச்சர் அவர்கள் வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கும் போது முந்திரி காடுகளை வளர்ப்பதற்காக நான்கு லட்சம் ரூபாய் ஒதுக்கியிருக்கிறோம் என்று அவர்களது வசீகரமான புன்னகையை வீசி என்னைப் பார்த்துச் சொன்னார்கள். சிந்திரி முந்திரி என்று பேசியவர்களுக்கு இது திருப்தி அளிக்கலாம் என்று சொன்னார்கள்.

நிதி அமைச்சர் திரு. சி. சுப்ரமணியம்: ஓரளவிற்கு திருப்தி அளிக்கலாம் என்றுதான் சொன்னேன்.

திரு சி. என். அண்ணாதுரை: அங்கே தொழில், இங்கே தொழில், அங்கே சிந்திரி இங்கே முந்திரி என்று நாங்கள் அடுக்கு மொழி கூறவில்லை. நாங்கள் அடுக்குமொழி பேசுவதில் நல்ல பயிற்சி பெற்ற பிறகுதான் கூறுகிறோம் அவைகள் ஓரளவிற்கு பயன் அளிக்கத்தக்க வகையில் இருப்பதையும் நாங்கள் பார்க்கிறோம். முந்திரித் தொழில் என்று நாங்கள் சொல்வது முந்திரிப் பழத்தை அல்ல, அதிலிருந்து, முந்திரிச் செடியிலிருந்து, கிடைக்கும் உப பொருள்களை வைத்துக்கொண்டு பிளாஸ்டிக் போன்ற சாமான்கள் செய்து தொழிலை வளப்படுத்த வேண்டுமென்று கூறுகிறோமேயொழிய, முந்திரி பழத்தை நாங்கள் கூறவில்லை யென்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆகவே, முந்திரி என்று நாங்கள் சொல்வது. அதிலிருந்து பிளாஸ்டிக் சாமான்கள் போன்றவைகள் செய்யலாம் என்பதை உள்ளடக்கித்தான் சொல்கிறோமே தவிர, முந்திரிப் பழத்தை நாங்கள் கூறவில்லை. முந்திரிபழக் காடுகள் நிதியமைச்சரவர்களின் மாவட்டத்தில் மட்டுமல்ல இருப்பது, நான் சிறு வயதில் ஓடிவிளையாடிக்கொண்டிருந்த காலத்தில் கைக்கு எட்டிய தூரத்தில் ஆத்தூரில் முந்திரிப்பழம் கிடைத்துக்கொண்டிருந்தது. அவைகளை நான் வேண்டிய மட்டில் எடுத்துக்கொண்டிருக்கிறேன். அம்முந்திரிப் பழங்களை நான் தின்று பழக்கப்பட்டவன்தான். ஆதலால் நிதியமைச்சரவர்கள் முந்திரிப் பழத்தை வளர்த்துத் தரவேண்டுமென்று நாங்கள் சொல்லவில்லை. அந்தகு தொழிலை வளப்படுத்த வேண்டுமென்று நாங்கள் சொல்லும்போது, சர்க்காரிடம் அதற்கு செலவழிக்க பணம் இல்லையென்று சொல்லக்கூடும். நிதி இல்லையென்றால் வரிபோடுங்கள் என்று சொன்னால் காங்கிரஸ் கொறடா அவர்கள் எனக்கே கொறடா கொடுப்பார்கள் நாங்கள் வரிபோட்டால் நீங்கள் அதை எதிர்ப்பீர்களே என்று. வரிகளைப் போட்டுத்தான்