உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

நாட்டை ஆளவேண்டுமென்றால் சர்க்காருக்கும், சத்திரம் சாவடிகளுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லை, ஒரு சர்க்காருக்குள்ள வருவாய் இரண்டு விதத்தில்தான் இருக்கவேண்டும் ஒன்று வரிமூலம் இரண்டாவது, வருவாய் தரக்கூடிய எல்லா துறைகளையும் சர்க்கார் கைப்பற்றவேண்டும். தனியார் கையில் இருக்கிறதே தனவந்தர் கையில் இருக்கிறதே என்ற பற்றோ பாசமோ குறுக்கிடக்கூடாது. இன்றையதினம், தொழில்களை பப்ளிக்செக்டர், பிரைவேட் செக்டர் என்று இரண்டாகப் பிரித்திருக்கிறார்கள். பிரைவேட் செக்டர் என்றால் தனிப்பட்ட முதலாளிகள் பணம்போட்டுத் தொழில் நடத்துவதாகும். பப்ளிக் செக்டர் என்றால் சர்க்காரே பணம்போட்டு நடத்துவதாகும் அதிலே பிரைவேட் செக்டருக்கு நாட்டை ஆளுகிற சர்க்கார் சில நேரங்களில் அவர்களுக்குக் கடன் கொடுக்கிறார்கள். உதவியும் அளிக்கிறார்கள், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் இத்தொழிலை நடத்துகிறவர்களுக்கும் உள்ள நெருக்கத்தைப் பொறுத்துத்தான் கடனும் உதவியும் அளிக்கப்படுகிறது ஆகவே, நான் சொல்ல விரும்புவது என்னவெனில் அந்த முறையை மாற்றி நம் நாட்டில் தொழில்கள் பப்ளிக் செக்டரில்தான் இருக்கவேண்டும். அதை இரண்டாகப் பிரித்து ஒன்று சர்க்காரே முழு மூலதனம் போட்டு நடத்துகிறது. இரண்டாவது சர்க்கார் 51 பங்குபோட்டு மற்ற பங்கை பொது மக்களிடமிருந்து பெற்று நடத்தவேண்டும் பொது மக்கள் தாராளமாகப் பணம்தர முன்வருவார்கள், தனிப்பட்ட முதலாளிகள் நடத்தும் தொழிலுக்கே அவர்களிடமிருந்து பங்குகள் வாங்க பொதுமக்கள் முன்வரும்போது சர்க்காரே தொழிலை நடத்தப் போகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டால் முதலாளிகளிடம் உள்ள நம்பிக்கையைவிட அரசாங்கத்தினிடம் அதிக நம்பிக்கை வைத்து பங்குகளை வாங்க முன்வருவார்கள். இன்றுள்ள சிறுதொகை சேமிப்பிற்குப் பாடல், ஆடல் மூலமாகவும், நாடக மூலமாகவும், நண்பர்களின் ஒத்துழைப்பு மூலமாகவும், கடைசியாக அதிகாரிகள் மூலமாகவும் நிறைவேற்றலாம் என்று கருதுகிறார்கள். சிறு சேமிப்புத் திட்டத்துடன் நான் சொல்லுகிற ஒரு சிறிய யோசனையையும் அதனுடன் இணைக்கவேண்டும். பணத்தைச் சேமித்துவையுங்கள் 12 ஆண்டில் 100 ரூபாய் 165 ரூபாயாகிவிடும் என்று கூடையில் மாஞ்செடியை வைத்துவிட்டு கூடையை எடுத்து வீட்டு மாஞ்செடி இருக்கிறது பாருங்களென்று சொல்வது மாதிரி இல்லாமல், விளம்பரம் கொடுப்பதைவிட்டு அதை மக்களுக்குப் பயன்படக்கூடிய முறையில் உபயோகப்படுத்தப்பட வேண்டும்.