உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

26—7—1957]

[வெள்ளிக்கிழமை

[அமைச்சரவையிடத்துச் செலவுத் தொகையை ஒப்புவிக்கின்ற தருணத்தில் ஆற்றிய உரை ].

பிற்பகல் 12–39

சட்டமன்றத் தலைவர் அவர்களே, இந்தச்சபையின் முன்னாலே நீண்ட நாட்களாக மிகச் சிறந்த ஆர்வத்தோடு, பல்வேறு பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டு, இன்றையதினம் இறுதிக் கட்டத்தில், "ஒப்படைத்தல்" (Appropriation) என்ற சம்பிரதாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒரு பெரிய தொகையை ஒப்படைப்பதற்கு வேண்டிய நம்பிக்கையைப் பெற்ற ஒரு அமைச்சரவை இன்றையதினம் இருக்கிறது என்பதை நான் பெருமையோடு எடுத்துச் சொல்லிக்கொள்கிறேன். அந்த அமைச்சரவை நல்ல எண்ணம் படைத்தது என்பதையும் இந்த மன்றத்திலே நான் பல தடவை எடுத்துச் சொல்லியிருகிறேன் ஆற்றல் படைத்தது என்பதையும் நான் வலியுறுத்திச் சொல்லியிருக்கிறேன். ஆனால், நல்லஎண்ணமும் ஆற்றலும் படைத்தவர்கள் தங்களுடைய சிந்தனா சக்திக்குத் தடை ஏற்படுத்தக்கூடிய வகையில் ஒரு துர்ப்பாக்கியமான அரசியல் சூழ்நிலைக்கு ஆட்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் எனக்கு இருக்கும் முக்கியமான குறைபாடு. ஆற்றல் இவர்களுக்குக் குறைவாக இருந்திருக்குமானால், அதற்கான அளவுக்கு இவர்களுக்கு அதிகாரம் இல்லாததைப்பற்றி நான் வருத்தப்பட்டிருக்க மாட்டேன். வேண்டிய ஆற்றலுள்ளவர்களும் நல்ல மனம்படைத்தவர்களும் நம் மாநில அரசாங்கத்திற்குக் கிடைத்திருந்தும். அவர்கள் மக்களின் குறைபாடுகளை அறிந்துகொள்வதற்கு நல்ல அக்கரை எடுத்துக்கொண்டிருந்தும் மக்களின்

குறைபாடுகளை நீக்குவதற்ன வழிவகைகளைக் காண்பதில் திறமைபெற்றிருந்தும் அந்தத் திறமையைத் தூண்டுவதற்கு எதிர்த் தரப்பிலுள்ளவர்கள் எடுத்துச்சொல்லும் கருத்துக்களைப் பெருமையோடு ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மை கொண்டிருந்தும், அவர்கள் சுயசிந்தனையோடு காரியங்களைச் செய்யமுடியாத அளவுக்கு இன்றைய அரசியல் சூழ்நிலை இருப்பதைப்பற்றி நான் உண்மையிலேயே கவலைப்படுகிறேன். நிர்வாக யந்திரத்திலுள்ள கோளாறுகளைப்பற்றி பல கனம் அங்கத்தினர்கள் குறிப்பிட்ட விஷயங்களை ஆளும் கட்சியாளர்கள் அடியோடு மறுக்கிறார்கள் என்று நான் கருதவில்லை.