77
ஆட்சியாளர்கள் அந்தக் குறைபாடுகளை நீக்குவதற்குத் தீவிர நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளவும், இந்த நடவடிக்கைகளில் எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பைப் பெறவும் தயாராக இருக்கிறார்கள் என்றுதான் நான் உண்மையிலேயே நம்புகிறேன், ஆட்சியாளர்களுடைய கொள்கைகளில் இருக்கின்ற முரண்பாடுகளைப் பற்றித்தான் நான் இங்கே வலியுறுத்த விரும்புகிறேன்.
ஆட்சியாளர்களின் கொள்கைகளைப் பொதுப்படையாகப் பார்க்கும்போது, மக்களின் நலன்களை வளர்க்கத்தக்க ஒரு நல்ல நிர்வாகத்தை நாட்டுக்கு அளிக்கவேண்டும் என்ற பொதுக் கொள்கை அவர்களிடத்தில் இருந்தாலும், அந்தக் கொள்கை நடைமுறைக்கு வரும் நேரத்தில் பல கொள்கை முரண்பாடுகள் அவர்களுடைய நிர்வாகத்தில் காணப்படுகின்றன என்பது தெரிகிறது. அந்தக் கொள்கை முரண்பாடுகளை எடுத்துச் சொல்லுவதற்கு எனக்கு உறுதுணையாக இருப்பது நான் அறிந்த உண்மைகள் மட்டுமல்ல, கனம் சபாநாயகர் அவர்களே, காங்கிரஸ் உறுப்பினர்கள் இந்த மாமன்றத்தில் எடுத்துச் சொன்ன பல்வேறு கருத்துக்களை ஆதாரமாக வைத்துக்கொண்டுதான் அந்த முரண்பாடுகளை நான் எடுத்துச் சொல்லுகிறேன்.
உழுபவனுக்கு நிலம் சொந்தம் என்ற கொள்கையை ஆட்சியாளர்கள் மதித்துப் பறைசாற்றுகின்ற இதே நேரத்தில் "மெகனெஸ்ட் அக்ரிகல்சர்"—பெரும் பெரும் விவசாயப் பண்ணைகள் விஞ்ஞான முறையில் வளர்க்கவேண்டும்—என்ற கொள்கையையும் ஆட்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இந்த இரண்டும் முரண்பட்ட கொள்கைகள் என்பதையும், உழுபவனுக்கு நிலம் என்ற திட்டமும் மெகனெஸ்ட் அக்கரிகல்சர் என்ற திட்டமும் ஏககாலத்தில் நிறைவேற்றப்பட முடியாது என்பதையும் சாதாரண பொருளாதார சாஸ்திரத்தைப் படித்தவர்கள் உணர்ந்து கொள்ளுவார்கள், அவர்களுடைய கொள்கையில் இந்தப் பெரிய முரண்பாடுகள் இருக்கின்ற காரணத்தால்தான் நம் ஆட்சியாளர்கள் உழுபவனிடத்தில் பரிவும் பாசமும் காட்டினாலும், பெரிய நில முதலாளிகளைக் கட்டுப்படுத்தமுடியாத நிலையில் இருக்கிறார்கள்.
ஆட்சியாளர்கள் பெரிய நிலமுதலாளிகளைக் கட்டுப்படுத்துவார்கள் கட்டுப்படுத்துவார்கள் என்று இலவுகாத்த கிளிபோல், இந்த நாட்டுமக்கள் பன்னெடுங்காலமாகக் காத்துக்கொண்டிருந்தார்கள். "தேர்தல்கள் முடிந்த பின் ஆட்சியாளர்கள் புதிய வலு-