உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

79

சபைக்குச் சொல்லிக்கொள்கிறேன். இந்த ஆட்சியாளரை நான் ஒரு டாக்டருக்கு ஒப்பிடுவதற்கில்லை; ஒரு கம்பவுண்டருக்கு ஒப்பிட்டால் அதனால் ஆட்சியாளர்கள் வருத்தமடைய மாட்டார்கள் என்று நான் எண்ணுகிறேன். இந்த ஆட்சியாளர்கள் நல்ல கம்பவுண்டர்கள். அவர்களிடம் நோயாளி வரும் நேரத்தில் நோயாளியை அவர்கள் பரிவோடு பார்க்கிறார்கள். நோயாளியிடமுள்ள நோயைக் கண்டுபிடிக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். கண்டுபிடித்த நோயை நீக்க விரும்புகிறார்கள். ஆனால், எந்த டாக்டரிடம் வேலை செய்கிறார்களோ, அந்த டாக்டர் கொடுக்கும் மருந்து பாட்டில்களில் தண்ணீர் அதிகமாகவும் மருந்து குறைவாகவும் இருப்பதால் தங்களுக்கு உண்டாகும் வருத்தத்தைப் புன்னகையாக மாற்றிக்கொண்டு, கிடைக்கும் மருந்தை நோயாளிகளுக்கு கொடுக்கிறார்கள். இந்த நிலைமையில் இன்றைய ஆட்சியாளர்கள் இருக்கின்ற காரணத்தினால்தான் நான் குறிப்பிட்ட முரண்பாடுகளும் குறைபாடுகளும் இருக்கின்றன என்று நான் உண்மையிலேயே கருதுகின்றேன். அதனால்தான் போலும் இந்த மாமன்றத்தை ஒரு காலத்தில் நேரில் அலங்கரித்துக்கொண்டிருந்தவர்களும், இப்போது படரூபமாக அலங்கரித்துக்கொண்டிருப்பவர்களுமான ஸ்ரீ ராஜகோபாலாச்சாரியார் அவர்கள், " இந்த மாநில அரசாங்கங்கள் Grant receiving corporation டெல்லியிலிருந்து கிராண்டுகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்; நன் கொடைகளை எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் கூட்டுறவு ஸ்தாபனங்களைப்போல் இந்த அரசாங்கங்கள் இருக்கின்றன" என்று குறிப்பிட்டார்கள் என்று நினைக்கிறேன். நாட்டில் வளர்ந்துவரும் இந்தப் புதிய கருத்தை ஆட்சியாளர்களுக்கு நாங்கள் வலியுறுத்திக் கூறுகிறோம். இந்தக் கருத்து மிகப் பிற்பட்ட மக்கள் தொகுதியிலிருந்து வருகிறது என்ற காரணத்தினால் இதை ஆட்சியாளர்கள் அலட்சியப்படுத்தினால், 'சாதாரணமாக, ரெயில்வே ஸ்டேஷனிலுள்ள செவிடர்கள் ரெயிலில் போகும்போது மணி அடித்ததைக் கேட்காமல் உறங்கிக்கொண்டிருந்துவிட்டு, ரெயில் போனவுடன் பதைபதைக்கும் அவல நிலையை அடைவது போல, நல்ல திட்டங்களைத் தீட்டினாலும், அவை நிறைவேற்றப்படாமல் இருக்கும் நேரத்தில், மக்கள் அல்லோலகல்லோலப்படும்போது, ஆட்சியாளர்கள் அவல நிலையை அடைவார்கள்' என்று அறிவுறுத்த விரும்புகிறேன்.

இப்போது ஆட்சியாளர்கள் தொழில் துறையில் எவ்வளவு நல்ல திட்டங்களைத் தீட்டினாலும் நாட்டு மக்கள் நலனடைய