94
இனி போலீஸ் சுடமாட்டார்கள் என்று இந்த பேதை நெஞ்சம் நினைத்துக்கொண்டிருந்தது
கொல்வதற்காகத்தான் சுடவேண்டும். சுட்டு கீழே விழுந்த பிணங்கள் மறவர்களின் பிணங்கள்தான். அவர்கள் கொடுமை செய்தவர்கள். அதனால் அப் பிணங்கள் விழுந்தால் பரவாயில்லை என்று சிலர் சொல்லலாம். ஆனால் அடுத்து குண்டு யார் பேரில் பாயும், இந்த ஐந்து வருடத்திற்குள் யார்யார் மேல் குண்டு பாயப்போகிறது, எத்தனை துப்பாக்கிப் பிரயோகம் செய்யப்போகிறார்களோ, எத்தனைபேர்கள் அதனால் உயிர்நீக்கப்போகிறார்களோ, எந்தெந்த இடங்களில் துப்பாக்கிப் பிரயோகம் நடக்கவிருக்கிறதோ என்று எண்ணிப்பார்க்கும்போது இந்த அமைச்சரவையின் மீது நம்பிக்கை இல்லையென்று சொல்லத் தோன்றுகிறது. நான் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறேன், உங்கள் அறிவில் உங்கள் ஆற்றலில் எனக்கு சந்தேகமில்லை என்று. ஆனால் நிலைமையைக் கண்டு அறிந்துகொள்வதற்கு நீங்கள் வைத்திருக்கும் அதிகாரிகள் உங்களுக்கு சரியான தகவல் தரவில்லை. நீங்கள் நன்கு ஆள வாய்ப்புத் தரவில்லையென்றுதான் நான் கருதுகிறேன். முத்துராமலிங்கத் தேவர் அவர்கள், 30, 33.ம் ஆண்டிலிருந்து இன்றையதினம் வரையில் அங்கு பெற்றிருக்கும் செல்வாக்கைப்பற்றி எல்லோரும் எடுத்துச் சொல்கிறார்கள். சசிவர்ண தேவர் அவர்கள் எடுத்துச் சொன்னபோது, முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் மறவர்களின் சமூகத்தில் மட்டுமல்ல, பிற சமூகத்தாரிடமும் நல்ல செல்வாக்கு பெற்றவர் என்று எடுத்துச் சொன்னார்கள், காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்கள் எடுத்துச்சொல்லும்போது அவர் ஜாதி ஆதிக்கத்தால் செல்வாக்கு பெற்றார்கள் என்று சொன்னார்கள், எது எப்படியிருந்தாலும் அவருடைய செல்வாக்கு மகத்தானது என்பதை யாரும் மறுக்கவில்லை. அவருடைய இந்தச் செல்வாக்கு இன்றையதினம் கொலைக்கும் கொள்ளைக்கும் பயன்பட்டதாகச் சொல்லும்போது, இந்த செல்வாக்குதான் காங்கிரஸிற்கு 10, 15 வருஷகாலமாகப் பயன்பட்டதல்லவா? என்று கேட்கிறேன், தேவர் அவர்கள் தரும் தொல்லைகள்பற்றி இப்பொழுது அமைச்சர்கள் அல்லல்படுகிறார்கள். ஏன்? இப்பொழுது அவர்கள் தரும் தொல்லைகள் காங்கிரசிற்கு ஏற்படுகிறது. அன்று நான் சேர்ந்திருந்த ஜஸ்டிஸ் கட்சி அல்லல்பட்ட காலத்தில் அவரது தொல்லைகள்பற்றி அவர் கொடுத்த தொல்லைகள்பற்றி ஒரு வார்த்தையாவது ஒருசின்ன வார்த்தையாவது சொன்ன-