உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் சட்டசபைச் சொற்பொழிவுகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

98

தெருக்கோடிகளில் எல்லாம், சந்தைகளில், பஸ் ஸ்டாண்டுகளில் எல்லாம் பேசப்படுகின்ற பேச்செல்லாம் இந்தப் பிரச்னையைப் பற்றித்தான். ஐந்து பேரை கையை கட்டிவைத்து சுட்டார்களாமே, இல்லை கையை கட்டவில்லை என்று இன்னொருவர். பார்த்தாயா என்று மற்றொருவர், நான் பார்க்கவில்லை, பார்த்தவர் ஒருவர் சொன்னார் என்று இன்னொருவர். இவ்விதமாக பேசப்படுவதை நாம் கேட்கின்றோம். இந்த ஆட்சியாளர்கள் இதை ஒன்றை மாத்திரமாவது கணக்கில் வைத்துக்கொண்டு இந்த நிலைமைகளை, இந்த சந்தேகங்களை நீக்கி. நிம்மதியை உண்டு பண்ணவேண்டும். நான், அல்லது எங்கள கட்சி, இந்த ஆட்சியாளர்களின் பேரில் நம்பிக்கை இல்லை என்று சொல்லுவதின் மற்றொரு காரணம், இப்போது சொல்லப்படுகின்ற, தாழ்ந்த நிலையில் இருந்த அந்த பகுதிகளை இந்த ஆட்சியாளர்கள் எந்த லட்சணத்தில் வைத்திருந்தார்கள் என்பதைப்பற்றி நாம் பார்க்கவேண்டும். போலீஸ் அமைச்சர் அவர்கள் வேண்டுமானால் வேறு காரணங்களை காட்டலாம். அங்கேயெல்லாம் போவதற்கு ரோடு வசதியில்லை, வேறு பலவசதிகளும் இல்லாமல் இருந்தது, அதனால் தான் அந்த பகுதிகளை சீர்திருத்த முடியவில்லை, இன்று நாங்கள் அந்த பகுதிகளில் இவைகளை எல்லாம் போக்குவதற்காக முற்போக்கான பல திட்டங்களை வகுப்பதற்காக Block Development போன்ற பல திட்டங்களை ஆரம்பித்து இருக்கின்றோம் என்று வேண்டுமானால் நீங்கள் இன்று சொல்லலாம்.--இப்போதாவது ஆரம்பித்ததற்காக நன்றி—இதுகாறும் ஆரம்பிக்காமல் விட்டுப் போனதற்காக அனுதாபம்—16 மறவர்களை சுட்டுக் கொன்றார்கள் என்பதோடு பழிக்குப் பழி சரியாகப் போய்விட்டது என்று மக்கள் கருதமாட்டார்கள். அடுத்த ஆண்டில் அவர்கள் எந்த மண்டலத்தில் இருந்தாலும் உங்களை சபிக்கப் போகிறார்கள். முன்னாலேயே படுகொலைகள் நடந்து கொண்டிருந்தது என்று கூறுகின்றீர்கள் இன்று இவற்றிற்கு எல்லாம் காரணம் என்னவென்று கருதுகின்றீர்கள்? மதிப்பிற்குரிய அரசாங்கத்தினர், ஆளும் கட்சியைச் சேர்ந்த அம்மையார் அவர்கள் எடுத்துச் சொன்னார்கள்—கலப்புத் திருமணம் எல்லாம் நடந்துகொண்டிருந்தது என்று—முக்குலத்து மக்களிடம் பெண் கேட்பதற்கு அந்தப் பகுதிகளில் போனால் குரல் கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள்—சுய மரியாதை இயக்கம் தோன்றின காலத்திலிருந்து கலப்புத் திருமணம் நடந்து வந்திருக்கிறது. உண்மையில் அந்தப் பகுதிகளில் எல்லாம் சுயமரியாதைக் கழகம் அதிக-