பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

அந்தக் காங்கிரஸ் தலைவர் அமளி நடத்தியே தீருவேன் என்றார். இராசாசி அவர்கள் தனக்கே உரிய பாணியில் "நீங்கள் வேலூருக்குப் போனால் தானே? என்றார்.

“என்ன சொல்கிறீர்கள் ?" என்று கேட்டார் காங்கிரஸ் தலைவர்.

"உங்களை நான் வேலூருக்கு விடப்போவதில்லை. ஐ. ஜி-க் குப்போன் செய்து சென்னையிலேயே வைக்கப் போகிறேன்" என்றார்.

உடனே அந்தக் காங்கிரஸ் தலைவர் பதைபதைத்தபடி, “ஐயோ அது மட்டும் வேண்டாம்” எனக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்.

அதற்குப் பின்னர் வேலூருக்குச் சென்று நான் காந்தி சிலையைத் திறந்து வைத்தேன்.

இதை நான் ஏன் கூறுகிறேன் என்றால் காந்தீயத்தை வெளி நாட்டவர்கள் பாராட்டுவதை வரவேற்கும் போது எதிர்க் கட்சியினர் பாராட்டுவதையும் வரவேற்க வேண்டும் என்பதற்காகத்தான்.

காந்தீயம் என்பது தத்துவமாகிவிட்டபோது அதை ஒரு கட்சியுடன் இணைக்காமலிருந்தால் இன்னும் அதற்கு. முழுமதிப்புக் கிடைக்கும்.

நானும், நான் சார்ந்திருக்கிற கட்சியும், அதன் ஆட்சியும் காந்தீய வழிப்படி மக்களுக்கு எது எது தேவையோ அவற்றை முடிந்த அளவு நிறைவேற்றுவோம்.

குடிப்பதை தீங்கென்று நீண்ட நெடுங்காலமாகவே நமது மக்கள் கருதி வந்திருக்கிறார்கள்.

குடித்துவிட்டுவந்து தங்களது மனைவி மக்களையே தாக்கியவர்கள் பற்றிய பல கதைகளை நான் அறிவேன். அத்தகையவர்களிடம் அடிபட்ட பெண்களின் கதறல் இன்னும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.