பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19

இன்று நடத்திடும் திருநாளின் மாண்பு, நாளையும் மறுநாளும்,பிறநாட்களிலும் நமது எண்ணத்திலும் செயலிலும் ஒளிவிட வேண்டும். அதற்கே இந்நாள்! அவர் புகழ் பாடி மகிழ்ந்திட மட்டுமல்ல- அவர் வழி நடந்திட, அவர் காண விரும்பியதைக் கண்டிட, அவர் தந்து சென்றதை உருக்குலைக்காதிருந்திட, அவர் ஊட்டிய உணர்ச்சிகளை உயிருள்ள வையாக்கிட!

மாலையின் மாண்பு, மணத்தில்! விளக்கின் பயன் ஒளியில் ! விழாக்களின் பலன் நமது செயலிலே இழைந்திடும் மாண்பிலே இருக்கிறது!

அவருடைய பிறந்த நாள் நாமெல்லாம் நற்கருத்தும் சீரிய செயலும் பெற்றிடுவதற்கான வாய்ப்பாக அமைதல் வேண்டும்.

அதற்கான முறையில் நாம் நடந்து கொள்கின்றோமா என்ற கேள்வியை எழுப்புகிறேன் — நம்முன் உள்ள மிகப் பெரிய கேள்வி அது.

மகான்களையும், மாவீரர்களையும் கொண்டாடுவதிலே வல்லவர்கள் நாம் என்றேன்; அவர்கள் புரிந்த அற்புதங்களை, மகிமைகளை, காதைகளாய், கவிதைகளாய் ஆக்கி மகிழ்வதிலும் நாம் மிகவும் வல்லவர்கள்.

அவர் கடலை அடக்கினார்: காற்றை விரட்டினார்; கரு நாகத்தை மாலையாக அணிந்தார் : கந்த மூலமே அவருக்கு உணவு! தொட்டார், பட்டமரம் துளிர்த்தது! பார்த்தார்! மலடி தாயானாள்! குருடன் பார்வை பெற்றான்—இப்படிப்பட்ட கதைகளைக் கேட்டுக் கேட்டுச் சொக்கிப் போகிறவர்கள் நிரம்பிய நாடு, நம் நாடு!

இந்த மகிமைகளையும் அற்புதங்களையும் வியந்து பேசுவது, பிறகு எதற்குப் பயன்படுகிறது ? அவர் மகான், ஆகவே அப்படிச் செய்தார். நாம் சாமான்யர்கள், நம்-