பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

என்றோர் நாடுண்டு; அங்கு விழிப்பும் எழுச்சியும் மிகஉண்டு !" என்று உலகம் அறிந்து கொள்ள முடிந்தது.

காந்தி அடிகளின் புகழொளிமூலமே உலகம் இந்தியாவைக் கண்டு வந்தது.

அவருடைய உருவமோ, உடலமைப்போ, பேச்சோ, நடவடிக்கையோ இராணுவ மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடிய விதமாக இல்லை. ஆனால் அவரால் இராணுவங்களையும் எதிர்த்து நிற்கக்கூடிய வீர உணர்ச்சியை இலட்சக்கணக்கானவர்களிடத்தில் உண்டாக்க முடிந்தது.

தன்னலமற்ற, விளைவு பற்றிய கவலையற்ற போராட்ட மனோபாவத்தை நாட்டிலே காந்தியடிகளால் தான் உண்டாக்க முடிந்தது. அதற்கு முன்பெல்லாம் விடுதலை கோரி மனுச் செய்யும் மேதாவிகளிடமே நாடு இருந்தது.

மண்குடிசை மன்னர்

அவருடைய பொதுப்பணியிலே ஒருகடுமையான சொல் ஒரு நேர்மையற்ற செயல், ஒரு சுயநலத்திட்டம் இருந்ததில்லை. அவருடைய சேவையினால் ஏற்பட்ட செல்வாக்கு இந்தியாவின் ஒளியையும், ஆசியாவின் புகழையும், நிறத்திமிர் கொண்டு இறுமாந்திருந்த ஐரோப்பிய வல்லரசுகளுக்கும் கிலி உண்டாக்கக்கூடிய அளவுக்குப் பரப்பிற்று. அவருடைய மொழியைக்கேட்க வெளிநாட்டு அரசாங்கத் தலைவர்கள் ஓடோடி வந்தனர். அவரது மண் குடிசையிலே தங்கினால் அது மதிப்பளிக்க கூடியதென்று மன்னர்கள் எண்ணினர்.

‘சுயராஜ்யம்’ பெற்றளித்து விட்டால் போதும் அவர் கருதவுமில்லை — கூறவுமில்லை. நாடும் மக்களும் எப்படி இருந்திடவேண்டும் என்பதனை அவர் கூறாமலுமில்லை.