பக்கம்:அண்ணாவின் சொல்லாரம்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

நாம் அனைவரும் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். காலமும் அதற்கேற்றபடி கனிந்து வருகிறது,

கலை உலகத்தில் உள்ளவர்கள் அரசியலுக்கு வரலாமா என்று சிலர் கேட்கிறார்கள். அரசியல் என்பதே ஒரு கலை தான் என்பது அறிஞர்கள் கண்ட முடிவு.

அரசியல் ஒரு கலையா ? அல்லது வெறும் கருத்துக் குவியலா?— என்று ஆராய்ந்த பேரறிஞர்கள் — அரசியல் என்பது கருத்துக் குவியல்களின் வழி மக்களைத் திருப்பிட அவர்களைத் திருத்தும் ஒருகலை—என்றே முடிவு கட்டியிருக்கிறார்கள்.

கலை என்பது மக்களைக் கட்டி யாள்வது—அரசியல் என்பது மக்களைக் கட்டியாண்டு திருத்துவது.

கலை என்பது நிழல் உருவில் இருப்பது— அரசியல் நிஜ உருவத்தில் இருப்பது.

கலை என்பது உடனடித் தேவைகளுக்காக இயங்குவதுஅரசியல் என்பது நீண்ட காலத் தேவைகளுக்காக இயங்குவது.

ஆகவே, கலையும் அரசியலும் பின்னிப் பிணைந்தவை. இதை உணர்ந்த பிறகும், கலையில் அரசியல் வரலாமா-அரசியலில் கலை புகலாமா— என்று கேட்பது 18ம் நூற்றாண்டின் கருத்தாகத்தான் இருக்க முடியும்;

நாம் அறிந்த அரசியல் தலைவர்களின் கலை ஈடுபாடு கண்டு நாம் தெளிய வேண்டும். இரண்டாம் உலகப்போர் நடை பெற்ற வேளையிலும் கூட ஓய்வு கிடைக்கும் போது வின்ஸ்டன் சர்ச்சில் திரைப்படங்களைப் பார்த்து ரசித்திருக்கிறார்.

உலகத்தில் மிகச் சிறந்த அரசியல் வாதியான ஆப்ரகாம்லிங்கன் நாடகம் பார்த்துக் கொண்டிருந்த போதுதான் சுட்டுக் கொல்லப்பட்டார்.