பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

 உயரிய வழக்காறுகளும் பண்பாடுகளும் நன்கு மதிக்கப்படு கின்றன, பரந்த நோக்கு, விரிந்த பார்வை ஆகியவை அவற்றில் எடுப்பாக உள்ளன.

3. நடை

பேச்சுக் கலையில் ஈடு இணையற்றவர் அண்ணா. தம் தலைமையுரைகள் விழுப்பம் பெறுவதற்குரிய எல்லா நுட்பங்களையும் அவர் கையாளுகின்றார். உவமை, சொல் திறம், மேற்கோள் மொழிகள் முதலியவை அந்நுட்பங்கள்.

பொதுவாக அண்ணாவின் மொழி வனப்பும் வண்ணமும் வியப்பும் வீறும் உடையது. தம் நுணுகியறிந்த படிப்பால் வியத்தகு முறையில் அவர் மொழியினைக் கையாளுகின்றார். உரைகள் முழுவதும் கருத்து வளம் நிரம்பியுள்ளது, வேறுபட்ட அவையினருக்குப் பேசுவதால், ஆற்றொழுக்குள்ள எளிய நடையை அவர் பயன்படுத்துகின்றார், அவர் தம் நடையில் ஆழ்ந்த அறிவாண்மையும் பெருமித உணர்வுப் பெருக்கும் வெளிப்படுகின்றன. -

பழுத்த அறிவு, உயரிய அறிவு நுட்பம், அகன்ற காட்சி அறிவு ஆகியவை அவர் தம் நடையினை அணிசெய்கின்றன. அதில் அவர் தம் ஆளுமையும் முனைப்பாகப் புலப்படுகிறது. கருத்து முதன்மையும் முழுமையும், கருத்து வெளிப்பாட்டு விழுப்பமும் அவர்தம் நடையின் தலைசிறந்த பண்புகள் ஆகும். சுருக்கம், தெளிவு, இனிமை, ஓசை, இன்பம், அறிவாழம் முதலியவை அவர்தம் நடையின் ஏனைய பண்புகள். முடிவாகக் கூறுமிடத்து, அவர் தம் நடை ஒரு தனி வீேறும் தனியாண்மையும் கொண்டது எனலாம்,

அஃதே அண்ணாவின் நடை.

அ. கி. மூர்த்தி.