பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

 வகுப்புத் துவேஷத்தோடு இருந்ததில்லை", என்று சொன்னேன்.

நான் சொல்லியதைக் கேட்டு, இராஜாஜி மகிழ்ச்சியடைந்தார். அப்படியானால், "நீங்கள் இந்த நாட்டை ஆளுவீர்கள்,” என்று அப்போதே வாழ்த்தினார்.

நானும் நெடுஞ்செழியனும், நடராசனும் மதியழகனும் திராவிடர் கழகத்தில் இருந்தபோது, அங்கே நாங்கள் வகுப்பு வேற்றுமையை எந்தத் தனிப்பட்டவரிடமும் காட்டவில்லை.

சுயமரியாதை இயக்கத்தின் பழைய இரசீது புத்தகம் யாரிடமாவது இருந்தால், அதைப் பாருங்கள். அதன் பின்பக்கத்தில் உறுப்பினருக்கான விதி முறைகள் என் கையால் எழுதப்பட்டவையாகும்.

“ வகுப்பு வேறுபாடு இல்லாமல், பகுத்தறிவுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளும் எவரும் உறுப்பினராகலாம், ” என்றுதான் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

நாம் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறிய பிறகுதான், அந்த அமைப்புக்கூடத் தனிப்பட்ட முறையில் ஒரு குறிப்பிட்ட வகுப்பாரைத் தாக்குவதாக அமைந்தது. அந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தி. மு. க. வுக்கு எதிர்முகாமில் இருப்பவர்களாக இருந்தால், அவர்களிடம் திராவிடர் கழகத்தினர் பரிவும் காட்டினார்கள்.

தி. மு. க. எந்த வகுப்பாரிடமும் வேற்றுமை காட்டியதில்லை என்பது மட்டுமல்ல தி. மு. க. சமுதாய ஒருமைப்பாட்டை உருவாக்கப் பாடுபடும்.