பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4. சமுதாயம் ஆசிரியர்களுக்குப் பட்டிருக்கும் கடமை


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இங்குவிருது வழங்கப்பட்டது, 'அவர்களுக்குச் சமுதாயம் கடமைப் பட்டிருக்கிறது' என்பதையே காட்டுகிறது. இங்கு 70 பேர்களுக்கு விருது வழங்கப்பட்டது. விருது பெற்ற ஆசிரியர்களை நான் பாராட்டுகிறேன்

கல்விச் செல்வத்தை அளித்தவர்களை, நாட்டின் எதிர்கால மக்களை உருவாக்கித் தருபவர்களை,ஆசிரியப் பெருமக்களைத் தமிழகம் பாராட்டுகிறது என்பதை இவ்விழா காட்டுகிறது, ஏழ்மையை ஏற்றாலும், நாட்டுக்குக் கல்விச் செல்வத்தை வழங்கி, அறிவுள்ள மக்களை உருவாக்கித் தரும் ஆசிரியர்களைத் தமிழக அரசு பாராட்டுகிறது. எத்தனையோ தொல்லைகள், சலிப்புகள், ஏக்கங்களுடன் வாழ்க்கை நடத்தும் ஆசிரியர்களின் பணி தூய்மையானது.

"நமக்குப்போதுமான ஊதியம் அளிக்காவிட்டாலும், வீடுகளைக் கட்டிக் கொடுக்காவிட்டாலும் நம்முடைய பண்பாட்டைப் போற்றி மதிக்கின்ற அரசு" என்று ஆசிரியர்கள் நினைப்பார்கள் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இப்படிச் சொல்வதால் ஆசிரியர்களின் ஏழ்மை நிலை நீடிக்க வேண்டுமென்று தமிழக அரசு நினைக்கவில்லை. ஆசிரியர்களின் வாழ்க்கை செம்மையாக அமைய வேண்டும் என்றே தமிழக அரசு எண்ணுகிறது.