பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

83


தமிழ் மொழி பற்றி நடக்கும் ஆராய்ச்சிகளையும் முடிவுகளையும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு மட்டுமே பயன்படுக் கொள்வோம் என்று உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்ப் பண்பாடு உலகத்தில் எல்லா மனிதர்களையும் சகோதரர்களாகவும் தோழர்களாகவும் ஏற்றுக்கொள்ளும். தன்னிடம் வருபவர்களை வாழ்த்தி வரவேற்கும். எந்த மொழியையும் உரிய முறையில் மதிக்கும். அறிவுச்செல்வம் உலகின் எந்தக்கோடியில் இருந்தாலும் தேடிச்சென்று எடுத்து வரும். ஆனால், தமிழர்கள் தமக்கென்று உள்ளதை ஒருகாலும் இழக்க உடன்பட மாட்டார்கள்.

இங்கிலாந்திலிருந்தும் பிறநாடுகளிலிருந்தும் வரும் நிபுணர்கள் தமிழ்மொழி இத்தகைய அருமையானமொழி என்று கூறுகிற நேரத்தில், அந்த மொழிக்குச்சொந்தக்காரர் என்று நினைக்கும்பொழுது, அந்த மொழிமீது பற்றுபாசம் ஏற்படாமலா இருக்கும்.

அத்தகைய மொழிக்கு எந்தக் காலத்திலாவது, எந்த நோக்குடனாவது, எப்படிப்பட்டவர்களிடமிருந்தாயினும் தனி மரியாதை கிடைக்கவில்லை என்றால், அதைத் தமிழகம் பொறுத்துக் கொள்ளாது.

ஆழ்கடல் கொந்தளித்துக் கொண்டுதான் இருக்கிறது. பக்குவமாகக் கடக்க வேண்டுமானால், நல்ல நாவாயின் மூலம் கடக்கலாம். அதுபோலத் தமிழர்களை அணைத்துக் கொண்டு சென்றால் அவர்களைவிடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.