உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அண்ணாவின் தலைமை உரைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

ஐக்கிய நாடுகள் அவையில், ஒற்றுமையைக் குறிக்கோளாகக் கொண்டு பணியாற்றினாலும், அனைத்து நாட்டுக் கொடிகளும் வெளியே பறக்க, உள்ளே பேசி விட்டு வெளியே வந்தாலும், எந்த நாட்டின் மீது யார் படையெடுப்பார்களோ என்னும் பேச்சு இருக்கும். ஆனால், உண்மையான ஒற்றுமை உணர்வினை ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்னும் பொன்மொழியில் வடித்து, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தந்த தமிழரின் பெருந்தன்மையை எண்ணி, எண்ணி நெஞ்சம் விம்முகிறது.

யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று பாடிய புலவர் தீதும் நன்றும் பிறர் தர வாரா என்றும் ,அடுத்த அடியில் பாடி இருக்கிறார். நல்லது வர வேண்டுமா; அது நாம்தான் செய்து கொள்ள வேண்டும். கெட்டது வர வேண்டுமா; நாம்தான் வரவழைத்துக் கொள்ள வேண்டும். எனவே, தீது வருமோ என்று ஐயப்பாடு கொள்ள வேண்டாம். அது நாமாகத் தேடிக் கொண்டால்தான் வரும். பிறர் தருவதல்ல தீதும், நன்றும். நாம் வேண்டாம் என்றால், அது வராது.

தமிழர்க்குத் தீது பிறர் தருவதால் அல்ல, நாமே தீது தேடிக்கொண்டாலொழியத் தமிழர்களுக்குத் தீது ஒரு போதும் வராது.

தமிழ் மொழியின் அருமை பெருமையை நாம் உணர்வதோடு, பிறரும் உணர்ந்து தமிழர்களாகிய நம்மை அவர்கள் நோக்கி, “இந்தத் தமிழ் மொழி உங்களுக்கு மட்டும் உரிய மொழி அல்ல. எங்களுக்-