பக்கம்:அண்ணாவின் பட்டமளிப்பு விழா உரைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

பிரசேல்ஸ் பல்கலைக் கழகத்தில் உரையாற்றியபொழுது, நம் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதா கிருட்டிணன் கூறியது பின்வருமாறு :

"மற்ற அரசு வகைகளைக் காட்டிலும் மக்களாட்சி மறுவற இயங்க, வேண்டுவன அதிக இயல்புகளே. பல்கலைக் கழகங்களிலேயே மக்களாட்சி உண்மை உணர்வினையும் மற்றவர்களின் கருத்துகளைப் பாராட்டுதலையும் வேறுபாடு களைச் சரிகட்டுவதையும் நாம் கலந்துரையாடல்கள் வாயி லாகவே வளர்க்க இயலும். தனியாள் தன் பொறுப்பினையும் தீர்ப்பினையும் செயல்படுத்துவதனால், மக்களாட்சியினை நலமுள்ளதாகவும் வலுவுள்ளதாகவும் வைக்க இயலும். பல்கலைக் கழகங்களின் கடந்த காலத்தின் போராட்டங்களை நாம் நினைவுகூர வேண்டியவர்களாகவும், தற்காலத்தின் வாய்ப்புக்கள் வல்லடிகள், இடர்கள், பொறுப்புக்கள் ஆகியவற்றை உணரவேண்டியவர்களாகவும் உள்ளோம்."?

மக்களாட்சி என்பது ஓர் அரசு வகை மட்டுமன்று ; அது புதிய வாழ்க்கைக்கு ஓர் அழைப்பு ; நலன்களையும் நாட்டங்களையும் பொறுப்புக்களையும் பகிர்ந்து கொள்ளுங் கலையில் ஓர் ஆய்வு ;பொதுத் தொண்டிற்காக ஒவ்வொரு தனியாளிடமும் உள்ள இயல்பான ஆற்றலை இயக்குவதற்கும் ஒரு முகப்படுத்துவதற்குமான ஒரு முயற்சி.

ஆகவே, நாம் தனியாள் திறனை வீணாக்குவதோ ஒரு தனி ஆடவர் அல்லது பெண்டிரை வலுக்குறையச் செய்வதோ ஒரு தனியான் வளர்ச்சியைக் குன்றச் செய்வதோ அவனைக் கொடுங்கோன்மையில் சிக்க வைப்பதோ கூடாது.

ஆண்டுக்காண்டு, பல்கலைக் கழகங்கள் பயிற்றுவித்து அனுப்பும் பட்டதாரிகள் வாயிலாகத் தன்னல வளர்ச்சியினையும் கொடுங்கோன்மையையும் உருவாக்க முயலும் ஆற்றல் களையும் அழித்தொழிக்கவேண்டும். பாசாங்கினையும் பகல் வேடத்தினையும் எதிர்த்துப் போராடவேண்டும். மனித மாண்பிணை அரியணை ஏறச் செய்திடவேண்டும்.