இணைப்புமொழி, தேசிய ஒருமைப்பாடு, சமூகச் சீர்திருத்தம், பொருளாதாரச் சமன்பாடின்மை முதலிய சிக்கல்களையும் இடையிடையே தீர்க்கும் தம் தீர்வுகளையும் கூறுகின்றார்.
மேற்கூறிய எல்லாச் சிக்கல்களுக்கும் கலந்துரையாடல் வாயிலாகத் தீர்வுகாணும் சிறந்த மாமன்றம் பல்கலைக்கழகமே என்பதும், இதில் மாணவர்களுக்குச் சிறந்த பங்குண்டு என்பதும் அண்ணாவின் முடிந்த முடிபாகும்.
விழுமிய பேச்சின் எல்லா உயரிய பண்புகளையும் அண்ணா உரைகள் பெற்றுள்ளன. சுருக்கமான இனிய முன்னுரையோடு தொடங்கி, விறுவிறுப்பாகவும் தொடர்ச்சியாகவும் அவை வளர்ந்து செல்கின்றன. அழகிய வருணனைகள், முத்தான மேற்கோள் மொழிகள், உலகளாவிய செய்தி, நாட்டின் சிக்கல்களுக்கரிய நல்ல தீர்வுகள் முதலியவை அவர் தம் உரைகளில் ஒளிர்கின்றன. அவை பொருத்தமான நற்செய்தியோடு முடிவடைகின்றன. தவிர நாட்டுப்பற்று, வீரவுணர்வு, மனிதாபிமானம், அமைதி நாட்டம் ஆகியவையும் அவற்றில் மிளிர்கின்றன. அறிவார்ந்த அணுகுமுறை, முதிர்ந்த பகுப்பாய்வு ஆகியவையும் அவற்றில் எடுப்பாக உள்ளன. ஆற்றொழுக்கு, சொல்விரைவு ஆகியவையும் குறிப்பிடத்தக்கவையே. உயரிய வழக்காறுகளும் பண்பாடுகளும் நன்கு மதிக்கப்படுகின்றன. இயல்பான நகைச்சுவை, நயமொழி, பரந்த மனப்பான்மை, விரிந்த நோக்கு ஆகியவையும் அவர்தம் உரைகளில் பளிச்சிடுகின்றன.
பேச்சுக்கலையில் ஈடு இணையற்றவர் பேரறிஞர் அண்ணா. தம் பேச்சு பெருமயுற எல்லா வகை இலக்கிய நயங்களையும் அவர் கையாளுகின்றார். உவமை, உருவகம், அடுக்குமொழி, சொல்திறம், மேற்கோள் மொழிகள் முதலியவை அந்நயங்களாம். உவமையும் உருவகமும் அடுக்கு மொழியும் மேற்கோள்களும் அண்ணாவின் உரைகளிலிருந்து பிரிக்க இயலாதவை.
அண்ணாவின் மொழி, வனப்பும் வண்ணமும் வீறும் உடையது. தம் ஆழ்ந்த படிப்பால் வியத்தகு முறையில் அவர் மொழியினைக் கையாளுகின்றார். உரைகள் முழுவதும் வற்றாக்