பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13


கூர்முனைப் பேனா கொண்டு அரண்மனைகளை, அஞ்ஞானிகளின் இருப்பிடங்களை, பழமையின் கோட்டைகளைத் தாக்கிய வீரன் வால்த்தேர் வெற்றி பெற்ற பின்னர் தான் புரட்சித்தேவன் லெனின் போராடி வெற்றிபெற முடிந்தது. சமுதாயத் துறையிலே வால்தேர் ஒரு புரட்சியை உண்டாக்கிய பின்னர்தான் மக்கள் லெனினை வரவேற்றார்கள்

முதலிலே சாக்ரடீஸ், பின்னர் வால்த்தேர், அதற்குப் பின் லெனின். இந்த மூன்று சம்பவங்களும் வேறுவேறு காலத்திலே நடைபெற்றன. இவ்வளவும் சமுதாயப் புரட்சிக்காகவே நடைபெற்றது. ஆனால் இவர்களிடையே வேறு சீர்திருத்தமில்லாமலில்லை. சாக்ரடீஸை அடுத்து பிளேட்டோ; வால்தேரையடுத்து ரூஸோ; மார்க்ஸை அடுத்து லெனின். இங்கனம் மூட நம்பிக்கை எதிர்ப்பும், அறிவுப் புரட்சியும் சமூகப் புரட்சியும் எங்கும் விரவியுள்ளன. ஆனால் நம் நாட்டில் இம் மூன்றையுமே நம் இயக்கம் ஒருங்கே நடத்த வேண்டியிருக்கிறது. இதனால்தான் நம் புரட்சி மூன்று புரட்சிகவின் ஒரு கூட்டாயிருக்கிறது.

முதன் முதலிலே மக்களுக்கு அறிவுப் புரட்சியை உண்டாக்கிய பின்னர் தான் மதம், கலை, கலாசாரம் ஆகியவற்றிலே அவர்களைத் திருத்தமுடியும், தியாகராயர் தான் முதலிலே நம்முடைய அறிவுக் கண்களைத் திறந்தார். அதைக் கொண்டுதான் நாம் இன்று மதத்தை எதிர்க்கிகிறாம். வேறுபல மூட பழக்கவழக்கங்களை முறியடித்தும் நாட்டின் நலிவைப் போக்கப் பாடுபடுகிறோம், இன்று நம் இயக்கம்,

“தனித்தனிமுக் கனிபிழிந்து வடித்தொன்றாக் கூட்டிச்
சர்க்கரையும் கற்கண்டின் பொடியு மிகக் கலந்தே,
தனித்தநறுந் தேன்பெய்து பசும் பாலுந்தெங்கின்,
தனிப்பாலுஞ் சேர்த்தொரு தீம்பருப்பிடியும் விரவி
இனித்தாறு செய்யளைந்தே யிளஞ்சூட்டில் இறக்கி
எடுத்தசுவைக் கட்டியினும் இனித்திடும்”