பக்கம்:அண்ணா கண்ட தியாகராயர்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

இலட்சம் ஈட்டியிருக்கலாம். ஆனால் அவர் அதனை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.


தியாகராயர் விரும்பியிருந்தால் சென்னையிலேயே பெரும்பாலான இடங்களை அவர் சொந்தமாக வாங்கியிருக்க இயலும். பணத்தின் மதிப்பு இன்றிருந்ததை விட அன்று பன்மடங்கு உயர்ந்திருந்தது. இன்றைய இலட்சம் அன்றைய ஆயிரம் ரூபாய்க்குச் சமமானது. அத்தகைய காலத்திலே பல இலட்சம் படைத்த அவர் நினைத்தால் இராமநாத் கோயங்காவைப் போலச் சென்னை நகரையே தன் முதலீட்டுப் பணமாக ஆக்கியிருக்கலாம். அவர் கூப்பிட்ட நேரத்திலே பணியாற்ற பல ஆட்கள் அவரிடம் இருந்திருக்கக்கூடும். எத்தனையோ சீமான்கள், சிற்றரசர்கள், வியாபார வேந்தர்கள் ஜெமீன்தார்கள் உண்டுகளித்து உல்லாச வாழ்வு வாழ்ந்து, களியாட்டத்தில் காலத்தைக் கடத்திக்கொண்டு இன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பதைப்போல தியாகராயரும் இருந்திருக்க முடியும்.


மேலும் தியாகராயர் விரும்பியிருந்தால், பழைய கோயில்களைப் புதுப்பிக்கும் வேலையிலோ, பளிங்கு மண்ட பம் கட்டும் வேலையிலோ ஈடுபட்டிருக்கலாம். அவர் விரும்பியிருந்தால் தெற்கிலுள்ள பழனியைப் போல வடக்கே ஒரு பழனியை உண்டாக்கியிருக்கலாம். இவைகளை ஏற்படுத்துவதற்குரிய பணம் அவரிடம் ஏராளமாக இருந்தது. அவர் இவைகளையெல்லாம் பெரிதாக மதிக்கவில்லை. தன்னுடைய சமூகத் தொண்டை தான் ஒரு பொருட்டாக மதித்தார். திராவிட சமூகத்திலே ஒரு பெரிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கினார். அரசியலிலே நம்மவர்கள் முதலிடம் பெறவேண்டுமென்று அவர் விரும்பினார். தியாகராயர் போக போக்கியத்தை விட்டு தாமாகவே கல்லும் முள்ளும் காட்டாறும் கருங்குழியும் நிரம்பிய பாதைவழி செல்லத் தொடங்கினார்.