பக்கம்:அண்ணா காவியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



திரு தி. வ. மெய்கண்டார்

'கனியமுது', 'பூக்காடு' ஆகிய கவிதை நூல்களைத் தமிழுக்கு அளித்துக் கால் நூற்றாண்டுக்கும் மேலாகக் கவிப்பாடும் கவிஞர் ஆனந்தம் அவர்கள், காவிய நாயகனான அண்ணாவின் புகழிலும் அன்பிலும் ஆழ்ந்து போன உள்ளத்தோடு, தம் நூலின் பாயிரத்தைப் புதுச் சுவையோடு தொடங்கித் தம் கவிதா சக்தியை வெளிப்படுத்துகிறார். -

கவிஞர் ஆனந்தம் அவர்கள் அண்ணாவுடனும்-அவர் சார்ந்த இயக்கத்துடனும் இணைந்து சேர்ந்து வளர்ந்தவ ராவார்; இது, அண்ணாவின் வரலாற்றை எழுதிய மற்ற வர்களுக்கு அமையாத நல்லதோர் வாய்ப்பாகும். தாம் பெற்ற அனுபவங்களையும் உணர்வுகளையும் நல்ல வண்ணம் பயன்படுத்தி அரியதோர் காவியமாக ஆக்கி விட்டார்!

'முப்பத்திரண்டு ஆண்டு'களாக இயக்கத்தின் எல்லா நிகழ்ச்சிகளோடும் தொடர்பு கொண்ட கவிஞர் இயற்றிய இக்காவியத்தில், பெரும்பாலும் எந்த ஒரு நிகழ்ச்சியும் யாருடைய பெயரும் விடுபடவில்லை!

அண்ணா பிறந்தது முதல் மறைந்தது வரை உள்ள அனைத்து நிகழ்ச்சிகளும் இந்நூலில் வருணிக்கப் பெற்றுள்ளன.

அண்ணாவின் இயல்புகளையெல்லாம் ஊன்றிக் கவனித்திருந்த கவிஞர், காவியமெங்கிலும் அவற்றைச் சொல்லிக் கொண்டே வருகிறார்.

அண்ணாவின் பெருந்தன்மையைச் சித்தரிக்கும் அபூர்வ நிகழ்ச்சிகளையும் கவிஞர் குறிப்பிடுகிறார்.

அண்ணாவின் இறுதி நாட்களைப் பற்றிக் கவிஞர் சொல்வது நம்மைச் சோகக் கடலில் ஆழ்த்துகிறது! கவிஞர் உள்ளம் கசிந்துருகிக் கண்ணிர் வரப் பாடுகிறார்.

புலவர் குழந்தை அவர்களின் 'இராவண காவிய'த் திற்குப் பிறகு கவிஞர் ஆனந்தம் அவர்கள் எழுதிய 'அண்ணா காவியம்' வரலாற்றில் சிறப்பானதோர் இடத்தைப் பெறுகிறது!

தமிழ் உள்ள அளவும் அண்ணாவின் புகழ் வாழும்: அண்ணாவின் புகழ் உள்ள் அளவும்-கவிஞர் ஆனந்தம் அவர்களின் 'அண்ணா காவியம்' வாழும்!

(கழகக் குரல் 17.11.1974)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/12&oldid=1077999" இலிருந்து மீள்விக்கப்பட்டது