பக்கம்:அண்ணா காவியம்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



தவத்திரு குன்றக்குடி அடிகளார்

நண்பர் கருணானந்தம் அவர்கள் ஒரு நல்ல கவிஞர் இயல்பிலேயே மலர்ந்த கவிஞர்.

சிலபேர் கவிஞர்களாகப் பிறந்திருக்கிறார்கள். சிலபேர் கவிதைத் தன்மையை முயன்று பெறுகிறார்கள். சில பேரிடத்தில் கவிதைத் தன்மை திணிக்கப்படுகிறது. கவிஞர் கருணானந்தம் அவர்கள் பிறவிக் கவிஞர் என்று நான் சொன்னால் எல்லோரும் உடன்படுவீர்களோ இல்லையோ தெரியாது. ஆனால் அவருடைய கவிதை வளத்தைப் பார்க்கிறபோது அந்த வழிவழி மரபு வளர்ந்திருக்கிறது.

நல்ல இசையமைத்துப் பாடும் சந்தமும், ஆற்றொழுக் கான கவிதை வளமும் அமைய, இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால் 20-ஆம் நூற்றாண்டில் கொச்சை மொழிகள், விரசங்கள் விரவாத ஓர் அருமையான அண்ணா காவியத்தை அவர் செய்திருக்கிறார்.

பெரும்பாலோருக்கு, உவமைகள் என்று சொன்னால் விரசமான அல்லது கொச்சைத் தனமான உவமைகள் தான் கிடைக்கின்றன. ஆனால் கவிஞரவர்கள் படைத்திருக்கிற அண்ணா காவியத்தில்-நெஞ்சிருக்கிற மனிதன் ஒருவன் இருப்பானானால், அவன் அந்தக் கவிதையை உணர்ந்து படிப்பானானால் ஓரிரண்டு தடவைகளாவது அவன் படிக்கிற வேகம் தடைப் பட்டிருக்கும்; பல இடங்களில் திருப்பித் திருப்பிப் படிப்பான். அவன் எவ்வளவு கல் நெஞ்சம் உடையவனாக இருந்தாலும், ஒரு தடவை இரண்டு தடவை அவன் அழாமல் இருக்க முடியாது.

இது ஒரு சிறந்த காவிய நூல்: இது போன்ற நடை சிலப்பதிகாரத்தில்தான் இருக்கிறது. அறநெறி போதிக் கின்ற நூலாகவும் இது இருக்கிறது. கட்சிக் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் எல்லாரும் படிக்க வேண்டிய ஒரு விழுமிய நூல். இந்நூலிலே சில இடங்களில் நகைச்சுவையும் கலந்திருக்கிறது.

அண்ணா அவர்களோடு கவிஞர் சாப்பிட உட்காரும் போது கவிஞரின் வயிறு முந்தி வருமாம். அதைப் பார்த்து இன்னும் சாப்பிடு என்று கூறி அண்ணா மகிழ்வாராம். இவ்வளவு நட்பாக தோழமையாக உறவாக இருந்தவரிடத்திலே இவ்வளவு பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கிறாரே கவிஞர்! அது ரொம்ப அபூர்வமாகத் தான் சிலருக்குக் கிடைக்கும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/15&oldid=1078005" இலிருந்து மீள்விக்கப்பட்டது