பக்கம்:அண்ணா காவியம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



என்னுரை

இக்குறுங்காப்பியத்தின் முதற்பதிப்பை அண்ணா அவர் களின் அறுபத்து அய்ந்தாவது பிறந்த நாளில் (15.9.74) வெளியிட்டேன். ஏறத்தாழ பதின்மூன்று ஆண்டுகளின் இடைவெளிக்குப் பின்னர் இரண்டாம் பதிப்பினை அண்ணனின் பதினேழாவது நினைவுநாளில் வெளியிடுகின்றேன்.

சேர்த்தல் நீக்கல் திருத்தல் ஆகிய மூவகை மாற்றங்கள் சிலவற்றை இப் பதிப்பில் செய்துள்ளேன்; அளவில் பெருகிடாவண்ணம்.

கையெழுத்துப் பிரதியைப் படித்துத் தந்தை பெரியார் அவர்களும், முதற்பதிப்புக்கு டாக்டர் கலைஞர் அவர்களும் வழங்கிய அணிந்துரைகளை இப்போதும் பயன் படுத்தியிருக்கிறேன். பெருமக்கள் பலர் ஆங்காங்கு நடைபெற்ற பாராட்டுக் கூட்டங்களில் நிகழ்த்திய உரைகளினின்று தொகுத்தவற்றை ஓரளவு இடம் பெறச் செய்துள்ளேன்.

முதற்பதிப்புப் பிரதிகள் எப்போதோ தீர்ந்துவிட்டன. எனினும் இரண்டாம் அச்சுக்குப் போகும் முனைப்பின்றி வாளிாவிருந்தேன். இந்த இடைக்காலத்தில் அண்ணா அவர்களைப்பற்றி ஏராளமாக நூல்கள் வெளியாகும் என்று எண்ணி ஏமாந்தேன்.

என் கையிலிருந்த ஒரே பிரதியை அண்மையில் படித்துப் பார்த்த மூவேந்தர் முத்து, உடனே தாம் இதனை வெளியிட விழைந்தார். அந்த நட்பின் செல்வரது ஆவலை நிறைவேற்றிட நானும் இசைவளித்தேன்.

அப்போது செய்த ஒவிய ஒப்பனைகள் இப் பதிப்பிலும் இடம் பெறச் செய்ய இயலவில்லை. இப்போது உள்ள வாய்ப்பும் வசதியும் இவ்வளவுதான். இத் திருத்திய அண்ணா காவியம் எல்லார்க்கும் நிறைவளிக்கும் என்பது திண்ணம். இன்று உருவாகி வளர்ந்து வரும் புதிய இளந் தலைமுறையினர்க்கு அன்புடன் இதனைப் படைக்கின்றேன்.

வணக்கம். நன்றி.


சென்னை-90 )
S. கருணானந்தம்
14.12.1986 )
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/16&oldid=1078007" இலிருந்து மீள்விக்கப்பட்டது