பக்கம்:அண்ணா காவியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணா காவியம்

24


ஆன்றவிந் தடங்கியோர் அவைதனிற் கூடிடச்

சான்றோர் பலருந் தமிழாராய்ந்தனர்.

பெண்பாற் புலவரும், ஆண்பாற் புலவரும்,

கண்போல் தமிழைக் காத்து வளர்த்தனர்.

ஒலையில் தீட்டிய உயர்ந்த இலக்கியச்

சோலையில் புகுந்து சூழ்ச்சிப் பகைவர்

நெருப்பிலும் நீரிலும் விருப்புடன் அழித்தனர்!

இருப்பவை சிலவே; எனினும், ஒருவன்

ஆயுள் முழுவதும் அரிதிற் கற்கினும்,

ஒயுதல் அன்றி உணரவொண் ணாதே!


வீரமும் காதலும் வெற்றியும் மணமும்

ஈரமும் ஈகையும் இணைந்த வாழ்வினில்

வேந்தரும் மக்களும் விழைவுடன் திளைக்க...

ஏந்திய புகழில் நீந்திய தமிழகம்...

இடையினில் நுழைந்த வடவரின்

சமய இடர்தனில் மூழ்கி, எழும்வழி யறியாது,

நீதியும் மதமும் பேதம் நிகழ்த்திட,

சாதிச் சமூக நிம்மதி யின்றியே,

ஒற்றுமை குலைந்து, கற்றது மறந்து,

குற்றுயிராகிக்' கூனிக்குமைந்திட...

முரசிலே,மூன்றும், தமிழிலே மூன்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/26&oldid=1078552" இலிருந்து மீள்விக்கப்பட்டது