பக்கம்:அண்ணா காவியம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
தந்தை பெரியார்

அவர்கள் வழங்கிய

பாராட்டுரை

நண்பர் ஆனந்தம் அவர்களால் கவி உருவாக செய்யப்பட்ட “அண்ணா காவியம்” என்னும் கவிதை நூலைப் பார்த்தேன்.

மிகுதியும் சுவைத்தேன். மகிழ்ச்சியும் அடைந்தேன். அக்கவிதை நூல் கவிதைகள் பெரிதும் அண்ணா அவர்களின் வாழ்க்கைத் தொகுப்பாகவும் அவரது அருங்குணங்களினது சித்தரிப்பாகவும் காணப்படுகிறது.

நண்பர் ஆனந்தம் கவிதை இயற்றுவதில் வல்லவர். ஆனாலும் அக்கவிதை புனைப்பில் மிக்க சுவையும் அருங்கருத்துக்களும் மலிந்திருப்பது மிகுதியும் பாராட்டற்குரியதாகும்.

நண்பர் ஆனந்தம் அவர்கள் எனக்கு அவரது மாணவப் பருவ காலம் தொட்டே நண்பராகவும் நம் இயக்கக் கருத்துக்களைத் தனது வலிவு மிக்க கொள்கையாகவும் கொண்டவராவார்.

அவர்கள் 30, 35 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே குடி அரசு காரியாலயத்தில் ஓய்வு நேரப் பணியாற்றி மிக்க உதவி புரிந்து வந்திருக்கிறார்.

ஆனந்தம் அவர்கள் கவி இயற்றுவதில் மாத்திரமல்லாமல் அரும் கருத்துக்கள் கொண்ட வியாசங்கள் எழுதுவதிலும் திறமை கொண்டவர்.

அவர் இப்போது “அண்ணா காவியம்” என்ற அரிய நூலைத் தொகுத்து இருப்பது மாத்திரமல்லாமல் இதற்கு முன்பும் “பூக்காடு” என்ற ஒரு சுவை பொருந்திய கவிதைத் தொகுப்பையும் வெளியிட்டிருப்பதோடு “கனி அமுது” என்கின்ற கவிதைத் தொகுப்பு நூலையும் வெளியிட்டிருக்கிறார்.

இவையாவும் அரிய கருத்துக்களுடன் சுவைமிக்க அழகுபடத் தொகுத்திருப்பதுடன் மிக்க எளிய நடையில் வசனம் போல் படித்து உணரும் தன்மையில் தொகுத்திருப்பது மிகுதியும் பாராட்டத் தக்கதாகும்.

ஈ. வெ. ராமசாமி
15-12-72
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/5&oldid=1158588" இலிருந்து மீள்விக்கப்பட்டது