பக்கம்:அண்ணா காவியம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களின்
சிந்து பாடும் சிற்றாறு


என்னருமை நண்பர் கவிஞர் ஆனந்தம், அண்ணா காவியம் தீட்டியுள்ளார்.

இதற்குப் பெரியாரின் முன்னுரையும் கிடைத்துள்ளது. பெரியார் முன்னுரையாகத் திகழ்ந்துதானே அறிஞர் அண்ணா புத்தகமாக நமக்குக் கிடைத்தார். அந்தப் பெரு நூலின் சில பக்கங்களாக நாம் இருக்கின்றோம்.

அழகான கவிதை வரிகளில், நாடகக் காட்சி போலவும், உரைநடை ஓவியம் போலவும், கதை சொல்லும் திறன் படைத்த கவிஞர் ஆனந்தம், அண்ணாவின் வரலாற்றுக் காவியத்தை, எளிய எழிலார்ந்த நடையில் உருவாக்கியிருக்கிறார்.

பெரியாருடனும், அண்ணாவுடனும், இயக்கத் தலைவர்களுடனும் நெருங்கிப் பழகி, தடம் தவறாப் பாதையில், நீண்ட நெடுநாட்களாக இலட்சியப் பயணம் புரியும் நண்பர் ஆனந்தம் அவர்கட்கு, இந்தக் காவியம் புனைவது எளிதேயாகும்.

அண்ணா உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகம், வெள்ளி விழா ஆண்டில் நடைபோடும் நேரத்தில் இந்த ஏடு வெளிவருவது மிகப் பொருத்தமாகும்.

"பெரியாரின் பேரெதிர்ப்பைச் சமாளித் துத்தான்
பெருமையுடன் பதினைவர் உள்ளே சென்றார்,
பெரியார்மேல் சுடுசொற்கள் வீசி விட்டுப்
பெரியவராம் நேருபிரான் சென்னை வந்தார்,
பெரியாரைத் தானேயென் றில்லை அண்ணா
'பிடிகருப்புக் கொடி' எனவே ஆணை யிட்டார்,
பெரியமன அரசினரோ அனைவ ரையும்
பிடித்தடைத்தார் சிறைக்குள்ளே! ஆயின் என்ன?”

என்ற வரிகளைப் படிக்கும்போது கவிதை ஆற்றலை மட்டுமல்ல; அண்ணாவின் அரசியல் பெருந்தன்மையையும் எண்ணி எண்ணிப் பெருமை கொள்கிறோம்.

“சிந்து பாடும் சிற்றாறு” இந்தக் கவிதை ஏடு எனச் சுருக்கமாகக் கூறிவிடலாம்.

அன்புள்ள,

மு. கருணாநிதி

28-8-74
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அண்ணா_காவியம்.pdf/6&oldid=1158589" இலிருந்து மீள்விக்கப்பட்டது