பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அண்ணா—சில நினைவுகள்


உணராமல், என் முகத்தைத் திரும்பிப் பார்க்கிறார். மாமாவும் அண்ணாவின் அதியற்புதமான நினைவாற்றலைக் கண்டு வியந்துபோய், என்னையே கவனிக்கிறார்.

உண்மையில் எனக்கு அக்கவிதை மறந்தே போய் விட்டது! எப்போது, எதில் எழுதினேன் என்பதுகூட நினைவில்லை. “சரியண்ணா. அதையும் தேடி எடுத்து, இதோட சேர்த்துடறேன்” என்றுதான் ஈனசுரத்தில் சொல்ல முடிந்தது: பிறகும், அது எனக்கு அப்போது கிடைக்கவில்லை!

நூல் அச்சாகி வந்தது சென்னையில். எங்கெங்கோ அலைந்து திரிந்து Feather weight paper வெளிநாட்டுக் காகிதம் கிடைக்குமா என தினகரனும் நானும் தேடினோம். அது கிடைக்காமல், வேறொரு ஃபின்லாந்து நாட்டுக் காகிதத்தான் அகப்பட்டது அதில் அச்சியற்றினோம். “அண்ணா! நீங்கள் ஒரு அணிந்துரை தரவேண்டுமே!” என்று வேண்டினேன். கொடுக்கிறேன் கொடுக்கிறேன் எனத் தமது இயல்பின்படி நாளைக் கடத்தினார்கள் அண்ணா!

1966 ஆகஸ்ட் 30, 31 சிவகங்கையில் இராமநாதபுரம் மாவட்ட தி. மு. க. மாநாடு நடைபெற்றது. வழக்க்ம் போல நான் நுழைவுச் சிட்டு விற்பனையில் ஈடுபட்டிருந்தேன். மாநாட்டின் இறுதியான சிறப்பு நிகழ்ச்சி, எப்போதும் அண்ணாவின் பேருரைதானே! அதற்குச் சற்று முன் கலைஞர் தமது சொற்பொழிவின் ஊடே, மாநாட்டு வசூல் தொகை எவ்வளவு என்பதைச் சொல்லி, அதற்கென ஒரு தனியான கைதட்டல் பெறுவதும் வாடிக்கையல்லவா? நான்தான் மொத்தம் எத்தனை ரூபாய் வசூல் என்பதைச் சொல்லும் அதிகாரி. சாயுங்காலமே கலைஞரிடம் ஒரு கண்டிவுன் போட்டேன்:- “என்னுடைய கவிதை நூலுக்கான அணிந்துரையை அண்ணாவிடமிருந்து இன்றைக்கே எழுதி வாங்கித் தரவேண்டியது உங்கள்