பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொலைந்துபோன ஒரு படம்

முப்பது ஆண்டுகட்கு முன்னர் நான் ஒல்லியாக இருந்தேன் என்று சொன்னால், யாரும். இப்போது நம்ப மறுக்கிறார்கள். அதற்குச் சாட்சியான காட்சியாகிய புகைப்படம் ஒன்று அண்மையில் எனக்குக் கிடைத்து, ஆனால் கைநழுவிப்போய் விட்டது. 1948 ல் அண்ணா வையும் என்னையும் வைத்து நண்பர் கரூர் கூர்மீசை குழந்தைவேல் ஒரு பாக்ஸ் காமிராவினால் எடுத்தது. மொட்டைமாடியின் கைப்பிடிச் சுவரில் அண்ணா அமர்ந் திருக்க நான் அருகில் சாய்ந்து நிற்பேன்.

கரூரில் நம் இயக்கப் பெரியவர் புலியூர் பெருமாள் (நாடார்) இல்லத்தில், அவரது மூத்தமகன் சோமசுந்தரம் திருமண வரவேற்பு சமயத்தில், ஒய்வாக இருந்த நேரம் படம் பிடித்தார் குழந்தை. சோமுவும் அவர் தம்பி கிட்டுவும் எனக்கு நல்ல நண்பர்கள். அவர்களின் அக்காள் கணவர்தான் மதுரை டாக்டர் அருணாசலம்,

டாக்டர் இரா. சனார்த்தனம், தனது பிஎச். டி. ஆய் வுக்காக அண்ணாவின் நாடகங்கள் என்பது போன்ற ஒரு தலைப்பை ஏற்றிருந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தப் படம் அவரிடம் சிக்கியதாம். அண்ணாவுடனிருப்பது நான் தானோ என்ற சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ளத்தான் அந்த போட்டோவை என்னிடம் காண்பித்தார். நானே வைத்திருந்தேன். எப்படியோ, காணாமல் போய் விட்டது. ஆயினும் என் பழைய நண்பர்களுக்குத் தெரி யும், நான் 1958 வரை ஒற்றை நாடியாயிருந்தேன் என்பது. அதனால்தானே பிற்காலத்தில் எனக்குத் தொந்தி விழுந்து விட்டதைப் பல முறை அண்ணா கேலி செய்தது!