பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/118

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

அண்ணா—சில நினைவுகள்


அசைவ சாப்பாடு சரிவரக் கிடைக்காத சூழ்நிலை. நாங்களிருவரும் அவரை அழைத்துக் கொண்டுபோய், ‘மீனாட்சி விலாஸ் ராவுஜி மிலிட்டரி ஓட்டலி’ல் ஒருபிடி பிடிப்போம். சிவாஜியின் அண்ணன் W. C. தங்கவேலுவும் அவர்கள் அன்னையாரும், நல்ல சம்பளம் தரக்கூடிய வேறு ஒரு கம்பெனியில் சிவாஜியைச் சேர்த்து விடுமாறு எங்களிடம் கேட்டுக் கொண்டனர். நவாப் ராஜமாணிக்கம்பிள்ளை எங்கள் உறவினர். அவரிடமிருந்து பிரிந்து தனியே சக்தி நாடக சபா அமைத்திருந்த டி. கே. கிருஷ்ணசாமியும் எங்கள் உறவினர். அதனால் திண்டுக்கல்லில் முகாமிட் டிருந்த சக்தி நாடக சபாவில் சிவாஜி கணேசனைக்கொண்டு போய்ச் சேர்த்து, அடிக்கடி சென்று பார்த்து வந்தோம். அங்கும் பெண்வேடம் புனைந்தார் கணேசன். அவர் தான் இன்று பராசக்தியில் முக்கிய பாத்திரத்தில் சினிமா நடிகராக அறிமுகம் ஆகிறார். பாவலர் பாலசுந்தரத்தின் நாடகத்திற்குத் திரைக்கதை வசனம் மு. கருணாநிதி. டைரக்ஷன் கிருஷ்ணன்-பஞ்சு. இசை சுதர்சனம்.

காஞ்சிபுரம் சென்றதும், அண்ணா மூவரையும் பார்த்துப் பொதுவாக வாங்க என்றார். எதிரில் மூன்று நாற்காலிகளில் அமர்ந்தோம். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன்-அண்ணா கணேசனிடம் பேசவேயில்லை என்பதை ! கணேசனும் அதைக் காட்டிக் கொள்ளவேயில்லை! நாங்கள் புறப்பட்ட போது “சாப்பிட்டுப்போங்கள்” என்று அண்ணா சொல்ல, சாப்பாடு முடிவதற்குள் மிகப் பலத்த மழை துவங்கி விட்டது. “இவ்வளவு மழையில் போகவேண்டாம். படுத்திருந்து, காலையில் போகலாம்” என்றார் அண்ணா. “இல்லை அண்ணா. பி. ஏ. பி. வண்டியை இரவல் வரங்கி வந்தோம். மெதுவாகப் போய் விடுகிறோம்” என்றார் கலைஞர். “ஜாக்கிரதையாகப் போங்கள் நிறைய லாரிகள் வரும்” என எத்சரித்தார் அண்ணா. நள்ளிரவும் கடந்துவிட்டது.