பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவிஞர் கருணானந்தம்

147

மாயூரத்திலிருந்து சென்னைக்குப் பத்து மணி நேரம் நான் வேலை செய்யும் ரயிலின் ரன்னிங் டைம்! சாவகாச மாகச் சிந்தித்து, ஒடும்போது பென்சிலால் எழுதிக் கொண்டே வந்து, எக்மோரில் இறங்கியதும் பேனாவால் காப்பி செய்துவிடுவது வழக்கம். இந்தக் குற்றாலம் கண்டேன்’ என்ற செய்யுளையும் அவ்வாறே எழுதினேன். காணாததைக் கண்டதாகப் பொய் சொன்னாலும், பொருத்தமாகவே இருக்கிறதைப் பார்க்க முடியும்:–

தனிநடந்தேன் நீண்டவழி; தள்ளாடிச் சோர்ந்தேன்!
இனி நடக்க அஞ்சி, இருகால்கள் கெஞ்சுகையில்...
சிந்தை குளிப்பாட்டும் சில்லென்ற மென்தென்றல்
வந்தென் உடல்வருடி வாட்டத்தை ஒட்டிடவே;-
நேர்கிமிர்ந்து பார்த்தேன், கிகரில்லா ஒவியந்தான்!
யார் வரவை நோக்கும் இளமங்கை என் எதிரில்?
மார்பகத்தை மூடுகின்ற வண்ணத் துகில்தானோ
கூர்முகட்டைப் போர்த்திக் குவியும் முகிற்கூட்டம்!
வெண்சங்கு போல மிளிரும் கழுத்தினின்று
கண்கவரும் நெஞ்சுக் கணவாயின் மீதொளிரும்
தென்பாண்டி நன்முத்தைச் சேர்த்த சரக்தானோ
முன்பாக வீழ்ந்து முறுவலிக்குங் தேனருவி!

குற்றாலத்திலேயே நீண்ட காலம் குடியிருந்தவன் எழுதியது போலவே தோன்றுகிறதல்லவா? இடையில் சில வரிகளுக்கு அப்பால் தொடர்கிறேன்:–

விந்தைமிக ஆல விழுதிறங்கும் பான்மையோ,
முந்திக் கவிழ்ந்திட்ட முன்கை விரலைந்தோ,
பண்டைத் திராவிடத்தாய்ப் பாலில் கிளைத் தெழுந்த
வண்டமிழும் கன்னடமும் வாழ்தெலுங்கும் மேன்மை
குன்றா மலையாளம் கொஞ்சும் துளுவும் போல
ஒன்றிற் சுரந்தும் உருவிற் பலவாகி,
ஆடிச் சலசலக்கும் அய்ந்தருவிக் காட்சிதான்
தேடிக் களிக்கும் தெவிட்டாச் சுவையன்றோ?