பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

அண்ணா—சில நினைவுகள்


அமைத்திருக்கிறார், கவியரங்கம் நடத்த விரும்புகிறார் என்று! கலைஞர் தலைமையில், அமைச்சர் மா. முத்துசாமி, நான், S. D. சுந்தரம், அப்துர் ரகுமான், கம்பனடிப் பொடி சா. கணேசன் ஆகியோர் பங்கேற்பதாக ஏற்பாடு. எனக்குத் தலைப்பு பாரதிதாசன். அமைச்சர்கள் விமானத் தில் செல்ல முடியும். மற்ற கவிஞர்களுக்கு ரயிலில் போக வர வசதியாகச் செலவுக்குப் பணம் கொடுக்க ஒப்புக் கொண்டார்கள். கலைஞர் என்னிடம் “நீங்க இதுவரை பிளேனில் போனதில்லியே! மேற்கொண்டு ஆகிற செலவை நான் போட்டுக் கொள்கிறேன். என்னோடு பிளேனில் வாங்க” என்று அழைக்கவும், அப்போதே பறக்கத் தொடங்கி விட்டேன். எங்களோடு விமானத்தில் டைரக்டர் பஞ்சு, எஸ். எஸ். ஆர். ஆகியோரும் வந்தனர்.

கலைஞருடைய டேப்ரிக்கார்டரை என் தோளில் தொங்க விட்டிருந்தேன். அப்போதெல்லாம் ‘மைக்’ தனியாக இருக்கும். பம்பாய் விமான நிலையத்தில் போய் இறங்கியதும், முதன் முறையாகப் பம்பாயைப் பார்ப்பவ னாகையால், வியப்பு மேலிட நடந்த போது, அந்த மைக்” கீழே நழுவியது எனக்குத் தெரியவில்லை. தங்குமிடம் சென்றவுடனே தெரிந்து போயிற்று! கலைஞரிடம் சொல்ல அஞ்சி, நண்பர் ரங்கநாத்துடன் பல இடங்களுக்கும் அலைந்து-அன்று ஞாயிற்றுக்கிழமை வேறு-புதிதாக ‘மைக்’ ஒன்று வாங்கி வந்தேன். அதற்குள், எங்களுடன் வந்திருந்த செக்யூரிட்டி ஆபீசரிடம் நான் ரகசியமாகச் சொல்லியிருந்த விஷயம், கலைஞருக்குத் தெரிந்து போயிற்று! காரணம், காணாமற்போன அதே மைக் பம்பாய் ஏர்போட்டில் கிடைத்து விட்டதாம். கலைஞர் என்னை மிகவும் கேலி செய்தார்! கவியரங்கத்தில் நான் பாடும்போது, குறுக்கே இலட்சிய நடிகர் எஸ். எஸ். ராஜேந்திரன் பந்தலில் நுழைய-அவ்வளவுதான் தமிழ் மக்கள் ரசனை! கவனம் எங்கேயோ போய் விடவே-நான் முடித்துக் கொண்டேன் பாடல்களை,