பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அத்தான்! திராவிட நாடு வேண்டும்!


ண்ணா முதலமைச்சர் பொறுப்பேற்றவுடனே, வெளியிலிருந்து யாரையாவது நேர்முக உதவியாளராக நியமிக்கலாம் என்று சிந்திக்கப்பட்ட நேரத்தில், ப. புகழேந்தி அங்கே இருந்தாராம். எப்படியோ அந்தச் சமயத்தில் நான் அங்கு இல்லை. அண்ணா சொல்லியிருக்கிறார்கள்- “யாரையாவது போடுவதென்றால், நம்ம கருணானந்தம் அல்லது புகழேந்தி - இந்த மாதிரி ஆட்களைத்தான் போடணும். ஏன்னா, இவுங்க எப்பவுமே எதையும் எதிர்பார்த்து, நம்மகூட இருக்கலெ! இவுங்களாலெ எனக்கு எந்த பிராப்ளமும் ஏற்படாது!” என்று. அதன் பிறகு, நண்பர் கஜேந்திரனைப் போட்டு, அவரால் அண்ணாவுக்குப் பெருமையா சிறுமையா? உதவியா உபத்திரவமா? என்பது விவாதத்துக்குரிய பிரச்சினையானது!

சில நாள் கழித்து ஒருமுறை அண்ணா என்னிடம் நேராகவே கேட்டார்கள்:- “ஏய்யா! இப்ப, செய்தித் துறைக்கு ஒரு டைரக்டர் போடணும். நீ வர்றியா?” என்று. “இல்லையண்ணா! நீங்க முதலமைச்சரா இருக்கறதையும், மற்ற நம்ம தோழர்கள் அமைச்சரா யிருக்கறதையும், இப்ப நான் இருக்கிற தொலைவிலேயே இருந்து பார்க்கத்தான் நான் விரும்புறேன். ரொம்ப நெருங்கி வந்துட்டா, இந்த மரியாதை இருக்காது! என்னை மன்னிச்சுடுங்க அண்ணா!” என்று பவ்யமாகப் பகர்ந்தேன். “நீ இல்லேன்னா, நம்ம மாறன் அல்லது செல்வம் இவுங்களைப் போடலாம். பத்திரிகை அனுபவ முள்ளவர்கள்தான் பயன்படுவாங்க!” என்று அண்ணா