பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

அண்ணா—சில நினைவுகள்


தெருவிலுள்ள ரசிக்லால் கடையில் ஒரு பாக்கெட் dried fruits (உலர்ந்த பழங்கள்) வாங்கி வந்தேன். கல்கண்டு, திராட்சை, பாதாம், முந்திரி, பிஸ்தா, பேரீச்சை முதலியன கலந்திருக்கும் அந்தக் கதம்பத்தில். முன்பு எப்போதோ அண்ணா இதைக் கையில் வைத்துக்கொண்டு, விருப்பமாகச் சாப்பிட்டதைப் பார்த்தேன். அது நினைவுக்கு வரவே இதை வாங்கி, நேரே அண்ணாவின் அறைக்குப் போய் அவர்களிடம் நீட்டினேன். “என்னய்யா இது?” - “பாருங்கள்; உங்களுக்குப் பிடித்ததுதான்!” - “அது சரி; இப்ப இதைக் குடுக்க என்ன காரணம்?” - காரணம் என்ன சொல்லலாம். வெளியில் கேள்விப்பட்ட ஒரு புதுச் செய்தி உதவிற்று. “கோ. சி. மணி M. L. C. தேர்தலில் வெற்றியாம் அண்ணா!” என்று சமயோசிதம் பேசினேன். பாதி எடுத்துக் கொண்டு “மீதியைக் கருணாநிதிக்குக் கொடு” என்றார்கள்.

அண்ணா ரசிக்லால் மிக்சரைத்தான் விரும்பிச் சாப்பிடுவார்களா! அப்படியும் சொல்லிவிடமுடியாது. ஒரு நாள் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் மன்றத்தில் சிறப்புரை யாற்றச் செல்ல வேண்டும் மாலை 4 மணிக்கு, அண்ணா! அப்போதுதான் உறங்கி எழுந்தவர்கள், வீட்டுத் தோட்டத்தில் காய்த்த மாங் காய்களில் இரண்டு மூன்று பறித்துவரச் செய்து, எதிரே ஒரு தட்டில் உப்புத் தூள் மிளகாய்த்தூள் வைத்துக் கொண்டு, கத்தியால் அரிந்த மாங்காய்த்துண்டங்களை அவற்றில் அமுக்கி, ருசித்து ரசித்துச் சாப்பிடுகிறார்கள்! எதிரில் சென்ற என்னிடம் கொஞ்சம் தந்தார்கள்.

“மாங்காயா முக்கியம்? கூட்டம் துவங்கும் நேரம் கடந்துவிட்டது. காலேஜ் function ஆச்சே அண்ணா! புறப்படுங்க!” என்றேன்.

“காலேஜ் மாணவர்களுக்கும் என் பழக்கம் தெரியுமய்யா! ஒரு மணி நேரம் லேட்டாய் போகலாம்! சாப்பிடு மாங்காயை!” என்கிறார்களே ஒழிய, பதற்றப்படவில்லை.

நிரந்தினிது சொல்லுதல் வல்ல அந்தப் பேரறிஞரின் சீர்மொழிகளை, இந்த ஞாலம் காத்திருந்து கேட்டதுதான் வரலாறு கூறும் செய்தியாகும்!