பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/194

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

அண்ணா—சில நினைவுகள்


இப்படி எம்.ஜி.ஆர். கட்சிக்குள் வந்த பிறகு, அண்ணாவிடம் கேட்டதுண்டு. “ஏன் அண்ணா? நடிகர்களை இந்த அளவு நம் மோடு சேர்த்துக்கொள்ளத்தான் வேண்டுமா? நடிகர்கள்-அதிலும் திரைப்படத் துறையில் ஈடுபட்டுள்ளவர்கள்-நிறைய sentiments.க்கு இடங்கொடுத்து, மூட நம்பிக்கைகளை வளர்ப்பவர்களாயிற்றே” என்றெல்லாம் நிறைய வினாக்களை எழுப்பி வந்தோம். இவற்றுக்கெல்லாம் தனிப்பட்ட முறையில் அவ்வப்போது சமாதானங்கள் சொல்லிவந்தாலும்-இதைப் பற்றிச் சற்று விளக்கமாக 1953.செப்டம்பரில் அண்ணா நெல்லை மாவட்ட இரண்டாவது சமூக சீர்திருத்த மாநாட்டில் உரையாற்றும்போது ஒரு கருத்துத் தெரிவித்தார் :-

“சமுதாய சீர்திருத்தந்தான் அரசியல் சீர்திருத்தத்தின் அடிப்படை. சமுதாயம் மூடநம்பிக்கைகளிலிருந்து விடு பட்டுத் தெளிவு பெற்றால்தான் அரசியலில் விழிப்புடன் பங்கேற்க முடியும்.

ஆட்சிச் சகடத்தை ஒட்டுகின்ற மக்கள், தெளிவு பெற்ற திறமையாளர்களாக இருக்க வேண்டும். ஒர் அழகான வண்டியில், அரேபியக் குதிரையைப் பூட்டி, உள்ளே நான்கு நீக்ரோக்களை உட்காரவைத்து, வண்டி ஒட்டுவதற்கு ஒரு பிக்மியனை நியமித்தால், அவனால் அந்த அரேபியக் குதிரையை அடக்கி, வண்டியை ஒட்டி, ஒழுங்காகக் கொண்டுபோய்ச் சேர்க்க முடியுமா?

மூடநம்பிக்கைகளிலிருந்து மக்களை விடுவிக்கத்தான், தி.மு.க. மாநாடு என்றாலே அது ஒரு கல்லூரி வகுப்பு போலே, அறிவியலையும் தத்துவத்தையும் விளக்குகின்ற பாங்கிலே அமைந்திருப்பதைக் காணலாம். சொற்பொழிவும், இசையும், கலையும், நாடகமும் இதற்காகத்தான் நிகழ்த்துகிறோம்.