பக்கம்:அண்ணா சில நினைவுகள் (உரைநடை).pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

அண்ணா—சில நினைவுகள்


மாலையில் அந்த ‘மணமக’னோடு கணேசன் வந்துவிட்டார். சும்மா என் வீட்டுக்குப் போகலாம் என்று சொல்லியே அழைத்து வந்தாராம். அண்ணா அவர்களையும், தன் மாமனார் மாமியார், மற்ற பெரியவர்களையும் பார்த்ததும் பையன் பயந்துபோய்விட்டான். அப்போதும் எல்லாரையும் உள் அறைக்குப் போகச் சொல்லிவிட்டு, அண்ணா அந்தப் பையனிடம் அருளொழுகப் பேசினார். எப்படியோ அவன் திருந்தி நல்ல ஒழுக்கமுள்ளவனாக மாறி, அந்தப் பெண்ணோடு மட்டும் வாழ்க்கை நடத்த மாட்டானா என்ற ஆதங்கம் அண்ணாவின் உரையாடலில் தொனித்தது. ஆனால்...... ஆனால்...... அவன் சொல்கிறான்: “என்னால் முதல் சம்சாரத்தைக் கைவிட முடியாது. இந்தப் பெண்ணையும் சேர்த்துக் கொள்கிறேன். தடையில்லை” என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் இது காறும் பொறுமையின் உச்சியில் நின்ற அண்ணா, கணமும் காக்க முடியாத வெகுளியின் உச்சிக்கே சென்று, உரத்த குரலில், “நீ பெரிய தசரதச் சக்கரவர்த்தி! எத்தனை பெண்டாட்டி வேணும்னாலும் வச்சிக்குவியோ? ஒழுக்கம் எவ்வளவு சிறந்ததுண்ணு யோசிச்சுப் பார்த்தியா? நீயெல்லாம் படிச்சது ஒரு படிப்பா? நீ வாத்தியார் உத்தி யோகம் பார்க்கிற லட்சணம் இதுவா? என்கிட்டவே இப்படிச் சொல்ல உனக்கு எவ்வளவு துணிவு? உன்னிடத்தில் இனி அந்தப் பெண் எப்படி வாழும்?” என்று பொரிந்து தள்ளிவிட்டார். நான் கணேசனுடைய கைகளைப் பிடித்துக் கொண்டேன்; இல்லாவிடில் அண்ணாவின் பேச்சுக்கு மாறாக, அவர் செயலில் இறங்கி விடுவார் போலிருந்தது! “சரிசரி, நீ எழுந்து வெளியே போப்பா! நீ எல்லாம் ஒரு மனுசனா?” என்று நான் சொல்லிக் கொண்டே அந்தப் பையனை வெளியில் அழைத்துச் சென்றேன்; காமாட்சி மச்சான், கே. ஆர். ஆர் ஆகியோர் வாயிலில் நிற்கிறார்களே என்கிற அச்சத்தினால்! ஆனால் அவனோ, கவிழ்ந்த தலையுடன் சென்று...... சே!